

குருநானக் தேவ் காண்பித்த பாதையில் நாட்டு மக்கள் செல்ல வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், பஞ்சாப் அரசு சார்பில் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதி பகுதியில் குருநானக் தேவ் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:நம் நாட்டில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அற்புதமான மகான் குருநானக் தேவ். அந்த காலகட்டத்தில், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளும், ஜாதி ரீதியிலான பாகுபாடுகளும் மலிந்திருந்தன. கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களும் நிரம்பி காணப்பட்டன. இதனைக் கண்டு மனம் வெதும்பிய குருநானக் தேவ், மனிதத்தையும், நன்னெறிகளையும் மக்களுக்கு போதித்தார்.
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை தான் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் வலியுறுத்தினார். சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை களைவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் மகத்தானவை ஆகும். வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் அல்லாமல், தமது செயல்களிலும் மனிதத்தை கடைப்பிடித்த அவதார புருஷர் அவர்.
அன்பு மட்டுமே மனிதர்களை இணைக்கும் ஆயுதம் என தீர்க்கமாக நம்பிய அவர், அனைவரிடமும் அன்பையும், கருணையையும் பரப்பினார். முதலில் அவரையும், அவரது போதனைகளையும் நிராகரித்த மக்கள், பின்னர் அதில் உண்மை இருப்பதை உணர்ந்து அவரை பின்பற்றத் தொடங்கினார்கள்.
தமது வாழ்நாள் முழுவதையும் மனித சமூகத்தின் உயர்வுக்காகவே தியாகம் செய்த குருநானக் தேவின் போதனைகளை, இந்திய மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவர் வகுத்துக் கொடுத்த பாதையில் செல்ல வேண்டும். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.