Published : 13 Nov 2019 08:05 AM
Last Updated : 13 Nov 2019 08:05 AM
ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சி 6 மாதங்கள் வரை அமலில் இருக்கும். எனினும் இடைப்பட்ட காலத்தில் ஏதாவது ஒரு கட்சி, கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உரிமை கோரினால் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு புதிய அரசு பதவியேற்கும்.
அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்பங்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவும் ஆட்சியமைக்க முயற்சி செய்யக்கூடும் என்பதால் பரபரப்பு கூடியுள்ளது. சிவசேனா எம்எல்ஏக்களும் அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கும் 8 எம்எல்ஏக்களும் மும்பை பாந்தரா புறநகர்ப் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். தேசியவாத காங்கிரஸின் 54 எம்எல்ஏக்கள் அந்த கட்சித் தலைமையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளனர்.
பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கட்சித் தலைமைகளின் கண்காணிப்பு, கட்டுப்பாட்டை மீறி எம்எல்ஏக்கள் அணி மாறும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.