Last Updated : 12 Nov, 2019 07:58 PM

 

Published : 12 Nov 2019 07:58 PM
Last Updated : 12 Nov 2019 07:58 PM

சாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்

சத்தீஸ்கர் மாநில கோன்ட்டா சட்டப்பேரவைத் தொகுதியின் சாலை எப்படி இருக்கிறது என்பதை வர்ணிக்க பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினியின் கன்னங்களை ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் வணிகவரித்துறை அமைச்சர் கவாஸி லக்மா.

ஹேமமாலினி மதுரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர். இதனையடுத்து சத்தீஸ்கர் அமைச்சரின் கருத்துக்கு பாஜக தரப்பிலிருந்து கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

காங்கிரஸ் அமைச்சர் கவாஸி லக்மா கூறும்போது, “நான் நக்சல்பாரிகளால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவன் (கொன்ட்டா), ஆனால் இங்கு சாலைகள் ஹேமமாலினி கன்னங்கள் போல் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இங்கு குருத் பகுதியில் சாலைகள் முழுதும் குண்டும் குழியுமாக கிடக்கின்றன, காரணம் ஊழல்தான்” என்று தர்மாத்ரியில் குருத் மேம்பாட்டுப் பகுதியில் அவர் குறிப்பிட்டு பேசினார்.

இதற்கு தர்மாத்ரி பகுதி பாஜக தலைவர் ராமு ரோரா, கண்டனம் தெரிவிக்கும் போது, “லக்மாவின் கருத்து காங்கிரஸ் கட்சியினரின் மனநிலையை பிரதிபலிக்கிறது. பெண் எம்.பி.யைப் பார்த்து இத்தகைய வார்த்தைகளைக் கூறுவது கண்டனத்திற்குரியது. லக்மா மன்னிப்புக் கேட்காமல் விடமாட்டோம்” என்றார்.

லக்மா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே, அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஒரு சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய லக்மா, “எஸ்.பி, மற்றும் கலெக்டர் சட்டைக் காலரைப் பிடி பெரிய அரசியல்வாதியாகி விடலாம்” என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

ஏற்கெனவே மத்தியப் பிரதேச அமைச்சர் பி.சி.ஷர்மா கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, குண்டும் குழியுமான சாலைகள் ஹேமமாலினி கன்னங்கள் போல் அழகாக மாற்றப்படும் என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x