

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு நாளை 2 மணிக்குத் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் (ஆர்டிஐ) கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "ஆர்டிஐ சட்டத்துக்குள் தலைமை நீதிபதி அலுவலகம் இன்னும் வராமல் இருப்பது துரதிர்ஷ்டம். வேதனைக்குரியது. நீதிபதிகள் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர்களா" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
88 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கியது. மூன்று நீதிபதிகள் வழங்கிய முக்கியமான தீர்ப்பில், "உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் சட்டத்துக்குள் வர வேண்டும். நீதிமன்ற சுதந்திரம் என்பது நீதிபதிகள் சிறப்புரிமை அல்ல. அது அவர்களுக்குரிய பொறுப்பு" எனத் தீர்ப்பளித்தனர்.
அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு இந்தத் தீர்ப்பு தனிப்பட்ட ரீதியாக பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால், நீதிபதிகளின் விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாலகிருஷ்ணனுக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
அதன்பின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றச் செயலாளர், நீதிமன்றத்தின் தகவல் அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுதாரர்களைக் கடுமையாகச் சாடியது. "வெளிப்படைத் தன்மையில்லா மூடுண்ட அமைப்பை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் நீதித்துறையை அழிக்க முடியாது. யாரும் இருளுக்குள் இருக்க விரும்பமாட்டார்கள். யாரும் இருளில் வைத்திருக்க மாட்டார்கள். இப்போதைய கேள்வி எல்லாம் அதற்குரிய எல்லைக் கோடுதான்" எனத் தலைமை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.
இந்தத் தீர்ப்பை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏபி.ஷா ஓய்வு பெற்றுவிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற விக்ரம்ஜித் சென்னும் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது எஸ்.முரளிதர் மட்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
பிடிஐ