Published : 12 Nov 2019 04:42 PM
Last Updated : 12 Nov 2019 04:42 PM

'தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டுறவை வளர்க்க பிரிக்ஸ் மாநாடு உதவும்': பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரேசில் புறப்பட்ட பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள 5 நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், தீவிரவாத ஒழிப்பில் கூட்டுறவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிக்ஸ் உச்சி மாநாடு உதவும் என்று பிரதமர் மோடி பிரேசில் புறப்படும் முன் தெரிவித்தார்.

பிரேசில் நாட்டில் உள்ள பிரேசிலியா நகரில் 13 (நாளை) மற்றும் 14-ம் தேதிகளில் 11-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கின்றன.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 6-வது முறையாக பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று வருகிறார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனாரோ ஆகியோரைச் சந்தித்து பிரதமர் மோடி பேச உள்ளார்.

குறிப்பாகப் பிரேசில் அதிபர் போல்சோனாரோவுடன் நடக்கும் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே ராஜாங்க ரீதியான கூட்டுறவை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார்.

பிரேசில் புறப்படும் முன் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்கிலும், எதிர்கால புத்தாக்கப் பொருளாதாரம் குறித்தும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இந்த உச்சி மாநாடு, உலகப் பொருளாதாரத்தில் முக்கியமாகத் திகழும் 5 நாடுகள் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்கில் அமையும்.

டிஜிட்டல் பொருளாதாரம், பிரிக்ஸ் நாடுகளுக்கு உட்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்கும் செயல்முறை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் ஆலோசிக்கும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் நான் பேசுகிறேன். பிரிக்ஸ் வர்த்தக கவுன்சிலிலும், புதிய மேம்பாட்டு வங்கித் தலைவர்களுடனும் கலந்தாய்வு நடத்துகிறேன்.

பிரேசில் அதிபருடன் இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, ராணுவம், வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இருக்கும் ஒத்துழைப்பு குறித்துப் பேச இருக்கிறேன். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்புகளை நடத்துவதற்கு பிரிக்ஸ் மாநாடு எனக்கு வாய்ப்பு வழங்கும்".

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் முடிவில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே முதலீடு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x