சிவசேனா ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தரவில்லையா? காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
Updated on
2 min read

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தரப்பில் ஆதரவு தரக்கூடாது என்பதற்காகவே முடிவு எடுப்பதைத் தாமதம் செய்தது என்ற குற்றச்சாட்டுக்கு அந்தக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 எம்எல்ஏக்கள் கொண்ட தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தும் அதை ஏற்க அக்கட்சி மறுத்துவிட்டது.

2-வது பெரிய கட்சியான 56 எம்எல்ஏக்கள் கொண்ட சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை சிவசேனா கோரியிருப்பதாகத் தெரிவித்த நிலையில் இரு கட்சிகளின் தலைமையும் முடிவை அறிவிக்கத் தாமதம் செய்தன.

இதனால், சிவசேனா கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே கூடுதலாக 2 நாட்கள் அவகாசத்தை ஆளுநரிடம் நேற்று கோரினார். ஆனால், ஆளுநர் 24 மணிநேரம் மட்டுமே சிவசேனா அளித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டார். சிவசேனா தலைமையில் ஆட்சி அமையக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி முடிவு எடுப்பதைத் தாமதம் செய்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தொலைபேசியில் பேசி ஆதரவு கோரிய பின்பும் அந்தக் கட்சி ஆதரவு அளிக்கத் தயக்கம் காட்டியது ஏன் என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்பினர். மேலும், சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் இருந்ததால் முடிவு எடுப்பதில் தாமதம் நிலவியதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரிதிவிராஜ் சவானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், " நாங்கள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்பதற்காகவே முடிவு எடுப்பதைத் தாமதம் செய்தோம் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.

நாங்கள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று நினைத்திருந்தால், நேற்று டெல்லியில் நீண்டநேரம் ஆலோசனை நடத்தி இருக்கத் தேவையில்லையே. ஒற்றை வார்த்தையில் ஆதரவு தர முடியாது என்று கூறியிருக்கலாமே.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று மாலை சந்திக்க உள்ளார்கள். ஆதலால் இந்த விவகாரம் இன்றுக்குள் முடிவுக்கு வந்துவிடும் எனக் கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியானது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், "குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று அமல்படுத்தினால்கூட கவலையில்லை. நிலையான ஆட்சி கொடுக்க முடியும் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து, பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால், குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவை எதிர்பார்த்து சிவசேனா காத்திருக்கிறது. காங்கிரஸ், என்சிபி கட்சிகளின் நடவடிக்கைகளை சிவசேனா எம்எல்ஏக்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். அவர்கள் முடிவுக்கு வந்தவுடன் நாங்கள் கூட்டணியில் சேர்வோம்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in