மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி? உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத் தாக்கல்

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம்
Updated on
2 min read

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதற்கு எதிராகவும், ஆட்சி அமைக்க உரிய காலக்கெடுவை ஆளுநர் வழங்காததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தை நாட சிவசேனா கட்சி ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 எம்எல்ஏக்கள் கொண்ட தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தும் அதை ஏற்க அக்கட்சி மறுத்துவிட்டது.
2-வது பெரிய கட்சியான 56 எம்எல்ஏக்கள் கொண்ட சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை சிவசேனா கோரியிருப்பதாகத் தெரிவித்த நிலையில், அந்தக் கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே கூடுதலாக 2 நாட்கள் அவகாசத்தை ஆளுநரிடம் கேட்டார். ஆனால், ஆளுநர் 24 மணிநேரம் மட்டுமே சிவசேனா அளித்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டார்.

மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த், தனது அமைச்சர் பதவியில் இருந்தும் விலகினார். இதனால் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதலும், இடைவெளியும் அதிகரித்தது.

இந்த சூழலில் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். இன்று இரவு 7.30 மணிக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பான பதிலைத் தெரிவிக்க ஆளுநர் கெடு விதித்திருந்தார்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நேற்று முதல் தொடர்ந்து பலகட்ட ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவிதமான தெளிவான முடிவும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவைப் பொறுத்தே தாங்கள் முடிவு எடுப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்தப் பதிலும் தெரிவிக்காததால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பகத் சிங் பரிந்துரைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டமும் அவரின் இல்லத்தில் இன்று பிற்பகலில் அவசரமாகக் கூடியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரை செய்யத்தான் கூட்டம் நடந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆட்சி அமைக்க தங்களுக்கு அளிக்கப்பட்ட 24 மணிநேர அவகாசம் போதாது. கூடுதலாக அவகாசம் கேட்டும் அதற்கு ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆளுநர் போதுமான அவகாசம் அளிக்காததற்கு எதிராகவும், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தத் திட்டமிடுவதற்கு எதிராகவும் சிவசேனா உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் தலைவர் அகமது படேல் ஆகியோருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேசியிருந்தார். இதையடுத்து, சிவசேனா சார்பில் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in