

மகாராஷ்டிராவில் சிவசேனா அரசு அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தால் மகிழ்ச்சி தான், இதன் மூலம் அவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பாஜக – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.
இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்து விட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. ஆனால் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தநிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து கூறுகையில் ‘‘எங்களை பொறுத்தவரை நிலைப்பாடு தெளிவானது. பாஜக அல்லது சிவசேனா அரசு அமைக்க எந்த நிலையிலும் ஆதரவளிக்க முடியாது.
ஆனால் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. அவ்வாறு ஆதரவு அளித்தால் எனக்கு மகிழ்ச்சி தான். இதன் மூலம் யாருடைய வாக்குகளை யார் பிளவு படுத்துகிறார்கள், யாருடன் யார் கூட்டணி சேர்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகும்’’ எனக் கூறினார்.