Published : 12 Nov 2019 12:51 PM
Last Updated : 12 Nov 2019 12:51 PM

‘‘பாஜக இப்படி நடத்தும் என எதிர்பார்க்கவில்லை’’ -சிராக் பாஸ்வான்

சிராக் பாஸ்வான் - கோப்புப் படம்

ராஞ்சி

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் பாஜக கட்டணியில் ஜார்கண்ட் மாணவர் அமைப்பு, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதாதளம் முடிவெடுத்துள்ளது. அண்மையில் நடந்த அந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. எனினும் ஐக்கிய ஜனதாதளத்தை சமரசம் செய்யும் முயற்சி வெற்றி பெறவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேரதலில் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் வெளியேறி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தற்போது பாஜக கூட்டணியில் அதிருப்தி நிலவுகிறது. அதுபோலவே மற்றொரு கூட்டணி கடசியான ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பும் கூட்டணி விவகாரத்தில் இறுதியான முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது:

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். 50 தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் முதல்வர் ரகுபர் தாஸ் ஆகியோரிடம் கேட்டோம்.

ஆனால் எந்த பதிலும் இல்லை. 2 அல்லது 3 தொகுதிகளாவது தருமாறு கேட்டோம். அதில் ஒரு தொகுதி கடந்த தேர்தலில் பாஜக மிக மோசமாக தோல்வியடைந்த ஒன்று. இருந்தாலும் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து பாஜக தலைவர்கள் எந்த உறுதியும் அளிக்கவில்லை. எங்களை பாஜக இப்படி நடத்தும் என எதிர்பார்க்கவில்லை. 50தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x