Published : 12 Nov 2019 12:24 PM
Last Updated : 12 Nov 2019 12:24 PM

'நாட் அவுட்' ஆகாத பாஜக: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பட்னாவிஸுக்கு 2-வது முறையாக ஆளுநர் அழைப்பு விடுப்பாரா?

மும்பை

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை. ஆட்சி அமைக்க பாஜக, சிவசேனா முடியாத சூழலில், காங்கிரஸ், என்சிபிக்கும் அதே நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் முன்பாக பாஜகவுக்கு மீண்டும் ஒருவாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதலால், மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பந்தயத்தில் இருந்து பாஜக முழுமையாக விலகிவிடவில்லை.

மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தனித்தனியாகப் பார்த்தால் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 288 இடங்களில் 145 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை.

ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும் பாஜகவும் போட்டியிட்டதால் இரு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது.

சிவசேனா ஆட்சி அமைக்க, ஆளுநர் கோஷியாரி வழங்கிய காலக்கெடுவும் முடிந்ததால், அடுத்ததாக பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியால் சிவசேனா ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைப்பது கடினம். சிவசேனா முதல்வர் பதவி இல்லாமல் இரு கட்சிகளுக்கும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதும் சாத்தியமில்லாதது.

ஒருவேளை என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மறுக்கும்பட்சத்தில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யக்கூடும். ஆனால் அதற்கு முன்பாக கடைசி வாய்ப்பாக, மீண்டும் பாஜகவை அழைத்தோ அல்லது பாஜகவே நேரடியாக 2-வது முறையாகச் சென்று ஆளுநரிடம் பேசி மீண்டும் வாய்ப்பு கோர சாத்தியங்கள் இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் முன்கந்திவார் நிருபர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகப் பார்த்து வருகிறோம். எங்களுக்குச் சரியான நேரம் வரும்போது, எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தித் தெளிவான முடிவு எடுப்போம். காத்திருந்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், "குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஏராளமான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. சிவசேனா ஆட்சி அமைக்க ஒருபோதும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காது. அதேசமயம், 2-வது முறையாக பாஜகவை அழைத்து ஆளுநர் பேசினால், நிச்சயம் ஆட்சிக்குத் தேவையான எண்ணிக்கையை பாஜக பெறும். தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவைக் கோருவோம் அல்லது காங்கிரஸ் கட்சி அல்லது சிவசேனா கட்சியிடம் இருந்து எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடும்" எனத் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிச்சயம் ஆதரவு அளிக்காது என்பது உறுதியாகத் தெரியும். யாரும் ஆட்சிஅமைக்காத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் வரும். ஒருவேளை மீண்டும் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டாகச் சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சி ஒரு ஆண்டுக்கு மேல் நீடிக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்த சூழலில் 30 ஆண்டுகாலமாக இருந்த சிவசேனா-பாஜக இடையிலான நட்புறவு தற்போது முறிந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து சிவேசனா வெளியேறியுள்ளது. இதனால் இனிவரும் காலத்தில் சிவசேனா பாஜக நட்பு புதுப்பிக்க வாய்ப்பில்லை என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், " சிவசேனா-பாஜக நட்புறவு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இனிமேல் சிவசேனாவை எங்கள் கூட்டணியில் சேர்க்கும் திட்டமில்லை. ஆனால், சிவசேனா கட்சியில் உள்ள எம்எல்ஏக்களில் 25 பேர் எங்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். தற்போது நடக்கும் சூழலால் சிவசேனாவில் உள்ள அனைவரும் திருப்தியாக இல்லை. இன்று மாலைக்குள் நல்ல திருப்பங்கள் ஏற்படும்" எனத் தெரிவித்தார்.

மாநிலத்தில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க சாதகமான சூழல் இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவை அழைத்து 2-வது முறையாக ஆளுநர் பேசுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பாஜக வட்டாரங்கள் நம்புகின்றன. அந்த வகையில் பாஜக மகாராஷ்டிராஅரசியலில் இருந்து இன்னும் 'அவுட்' ஆகவில்லை, 'நாட் அவுட்'டில் தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x