

கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஆய்வு செய்தார்.
வங்கக் கடலில் உருவான ‘புல்புல்’ கடந்த சனிக்கிழமை இரவு மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சாகர் தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் கெபுபாரா இடையே கரையை கடந்தது. இதில் மேற்கு வங்கத்தில் 10 பேர் உயரிழந்தனர். சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவும் 48 மணி நேரத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யவும் மாநில தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா தலைமையில் பணிக்குழு அமைத்துள்ளார்.
மே.வங்கத்தின் நம்கானா மற்றும் பக்காலியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இதையடுத்து அவர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து காகதீப்பில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புயலுக்கு முன் 1.78 லட்சம் பேர் 471 முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை அப்புறப்படுத்தாமல் விட்டிருந்தால் அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதை என்னால் கூற முடியாது. அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். முன்னேற்பாடுகளை மத்திய அரசும் பாராட்டியுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 323 சமையல் அறைகள் திறக்கப்பட்டுள்ளன. குடிநீர், மருந்துப் பொருட்கள் மற்றும் மின்சார விநியோகம் தற்போதைய தேவையாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார். வடக்கு 24 பர்கானால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பசீர்ஹத் பகுதிகளை மம்தா இன்று பார்வையிட உள்ளார்.