

ஜபல்பூர்
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி (81). முன்னாள் சம்ஸ்கிருத ஆசிரியரான இவர் 1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களால் மிகுந்த வருத்தம் அடைந்தார். தீவிர ராம பக்தையான ஊர்மிளா, அப்போது முதல் அயோத்தி விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்று வேண்டி கடந்த 27 ஆண்டுகளாக பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்து வந்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடந்த சனிக்கிழமையன்று, அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றும் வேறு இடத்தில் 5 ஏக்கரில் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. இந்த பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்பட்டதால் ஊர்மிளா மகிழ்ச்சி அடைந்துள்ளார். விரைவில் தனது விரதத்தை கைவிடவும் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஊர்மிளாவின் மகன் அமித் சதுர்வேதி கூறுகையில், ‘‘அயோத்தி நில விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்படுவதற்காக தனது 51 வயதில் எனது தாய் விரதத்தை தொடங்கினார். கடந்த 27 ஆண்டுகளாக உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் வேறு எதையும் சாப்பிடவில்லை. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு நன்றி தெரிவித்து என்னை கடிதம் எழுதச் சொன்னார். விரைவில் அவர் சிறப்பு பூஜைகளுக்குப் பின் வழக்கமான உணவை சாப்பிடப் போகிறார்’’ என்றார்.