

மத்தியப் பிரதேசம் வழியாக சென்ற 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நள்ளிரவில் ஆற்றுப் பாலத்தை கடந்தபோது அடுத்தடுத்து தடம்புரண்டன. இதில் சில பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. இந்த பயங்கர விபத்தில் 29 பயணிகள் பலியாயினர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டுள்ள பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மும்பையில் இருந்து வாரணாசி செல்லும் காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலும், பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து மும்பை செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் செவ்வாய்கிழமை வழக்க மான பாதையில் பயணித்தன. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தின் வழியாக 2 ரயில் களும் சென்று கொண்டிருந்தன.
ஆற்றில் கவிழ்ந்தது
ஹர்தா பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மச்சக் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஆற்றுப் பாலத்தை தாண்டி வெள்ளம் ஓடியது. இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு 11.30 மணி அளவில் காமயானி ரயில் மச்சக் ஆற்றுப் பாலத்தின் மீது சென்ற போது திடீரென தடம்புரண்டது. இதில் இன்ஜின் மற்றும் 4 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன.
அடுத்த ரயில்
இதற்கிடையில் எதிரே மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டி ருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலும் மேம்பால பகுதியிலேயே தடம் புரண்டது. மழை வெள்ளத்தால் பாலத்தின் சில இரும்பு பகுதிகள் அடித்து செல்லப்பட்டதால் விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ம.பி. தலைநகர் போபாலில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள கிர்கியா மற்றும் பைரங்கி ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதுகுறித்து ம.பி. அரசு செய்தித் தொடர்பாளர் அனுபம் ராஜன் கூறும்போது, ‘‘ரயில் விபத்தில் இதுவரை 29 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 13 ஆண்கள், 11 பெண்கள், 5 குழந்தைகள் அடங்குவர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
அமைச்சர் தகவல்
இந்த விபத்து தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ‘‘கனமழையால் ஏற்பட்ட வெள்ளத் தால் இருப்புப் பாதையில் அரிப்பு ஏற்பட்டதே மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ரயில்வே பாதுகாப்பு ஆணை யருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
அலட்சியம் காரணமா?
ஒரே இடத்தில் 2 ரயில்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பணியாளர்கள் பணியில் அலட்சியமாக இருந்ததும் இதற்கு முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போபால் ரயில்வே மண்டல மேலாளர் அலோக் குமார் கூறும்போது, ‘‘ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பயணிகளும் காமயானி எக்ஸ்பிரஸில் ஒரு பயணியும் இறந்துள்ளனர்’’ என்றார்.
விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் எண்ணிக்கை யும், ம.பி. அரசு அதிகாரிகள் கூறும் எண்ணிக்கையும் முரண்பட்ட வையாக உள்ளன. மேலும், எத்தனை ரயில் பெட்டிகள் தடம் புரண்டன என்பதில் முரண்பட்ட தகவல்களே வெளியாகி உள்ளன.
பிரதமர் இரங்கல்
“மத்தியப் பிரதேசத்தில் நடந்த இரட்டை ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். காயமடைந் தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலைமையை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரூ.2 லட்சம் நிவாரணம்
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், படுகாய மடைந்தவர்களுக்கு ரூ.50,000, லேசாக காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.