Published : 11 Nov 2019 08:08 PM
Last Updated : 11 Nov 2019 08:15 PM
மும்பை,
இன்னும் 24 மணி நேரம் உள்ள நிலையில் மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க சிவசேனா 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டதற்கு அம்மாநில ஆளுநர் மறுத்துவிட்டதாக சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
“அரசமைக்க விருப்பமா என்று எங்களிடம் கேட்கப்பட்டது. நாங்கள் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தத் தொடங்கி விட்டோம். ஆளுநரிடம் ஆட்சியமைக்க விருப்பம் என்று தெரிவித்தோம், ஆனால் நாங்கள் கேட்ட 48 மணி நேர அவகாசம் கொடுக்க கவர்னர் மறுத்து விட்டார். பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடைமுறை முடிந்து இறுதி செய்ய குறைந்தது 48 மணி நேரம் ஆகும், ஆனால் கவர்னர் அதற்கும் குறைவான நேரமே உள்ளது என்று கூறிவிட்டார்.
24 மணி நேரம்தான் அவகாசம் என்று கவர்னர் கூறிவிட்டார். இந்தக் கால அவகாசம் போதாது. ஆனால் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுதான் இருப்போம். மகாராஷ்ட்ராவில் நிலையான ஆட்சி வழங்கிட சிவசேனா உறுதிபூண்டுள்ளது” என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநரைச் சந்தித்த சிவசேனா குழுவில் 7 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர். “யார் முதல்வரானாலும் எங்கள் அரசு விவசாயிகள், தொழிலாளர்களுக்கானது” என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.