Published : 11 Nov 2019 07:16 PM
Last Updated : 11 Nov 2019 07:16 PM

மராது குடியிருப்புக் கட்டிடங்கள் ஜன.11, 12 ஆகிய தேதிகளில் இடிப்பு

கொச்சி

கடற்கரை மண்டலப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தினால் இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கேரளா மாநில மராது குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடங்கள் வரும் ஜனவரி 11, 12 தேதிகளில் இடிக்கப்படவுள்ளது.

மொத்தம் 4 அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களைக் கொண்டது மராது குடியிருப்புகள். இதில் ஆல்பா செரீன், ஹோலி ஃபெய்த் எச்-20 ஆகிய இரண்டு குடியிருப்புகள் முதலில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட உள்ளன.

திங்களன்று சம்பந்தப்பட்ட பாத்யதைதாரர்களிடம் கலந்தாலோசனை மேற்கொண்ட முதன்மைச் செயலர் டாம் ஜோஸ் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

இதில் ஜனவரி 11ம் தேதியன்று ஆல்பா செரீன், ஹோலி ஃபெய்த் எச்-20 ஆகிய இரண்டு குடியிருப்புகளும் மறுநாளான ஜனவரி 12ம் தேதியன்று கோல்டன் கயலோரம், ஜெயின் கோரல் கவ் ஆகிய குடியிருப்புக் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்படவுள்ளன.

ஒட்டுமொத்த கட்டடங்களையும் இடிக்க கேரள அரசு உச்ச நீதிமன்றத்திடம் அக்.9 முதல் ஜனவரி 17ம் தேதி வரை கால அவகாசம் கேட்டிருந்தது.

இதனையடுத்து இன்று ஜனவரி 11, 12-ல் கட்டிடங்கள் இடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிப்பு நடைபெறும் போது கட்டிடங்களின் 200 மீ சுற்றுப்பரப்பிற்குள் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொச்சி மாவட்ட துணை ஆட்சியர் ஸ்னேஹில் குமார் சிங், கூறும்போது, “கட்டிடங்களை இடிக்க நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்தக் கட்டிடங்களை 10 நிமிடங்களில் இடித்து தரைமட்டமாக்கி விடும் என்றாலும் நடைமுறை ரீதியாக அதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் உள்ளதால் 4 மணி நேரம் வரை எடுக்கலாம் என்று கருதுகிறோம். கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி 15 நாட்களில் இறுதி செய்யப்படும்” என்றார்.

அன்றைய தினம் அங்கு வேடிக்கைப் பார்க்க வருபவர்களின் கூட்டமும் அதிகமிருக்கும் என்பதாலும் ஊடகங்கள், தொலைக்காட்சி போன்றவையின் இருப்பும் அதிக அளவில் இருக்கும் என்பதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக்கப்படும், தெள்ளத் தெளிவான திட்டமிடுதலுடன் இது நிறைவேற்றப்படும் என்று கொச்சி நகர போலீஸ் உயரதிகாரி விஜய் சக்காரே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x