Published : 11 Nov 2019 06:36 PM
Last Updated : 11 Nov 2019 06:36 PM

ஒடிசாவில் அதிர்ச்சி: செல்போன் வெடித்ததால் இளைஞர் மரணம்

பிரதிநிதித்துவப் படம்

புவனேஸ்வர்

சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தபோது செல்போன் திடீரென வெடித்ததால் இளைஞர் மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் ஒடிசாவில் இன்று நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

''நயகார் மாவட்டத்தில் உள்ள ரான்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குணா பிரதான் (22). இவர் பாராதிப் நகரில் உள்ள ஜெகந்நாத் டிரக் ஓனர்ஸ் அசோசியேஷன் மூலம் கட்டப்படும் கோயில் கட்டுமானப் பணியில் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார்.

குணா பிரதான், இன்று அதிகாலை பாராதிப் நகரில் உள்ள தனது அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறங்குவதற்கு முன்பு நேற்றிரவு தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தார்.

சிறிதளவே சார்ஜ் ஏறியிருந்ததால் அதைப் பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் அருகில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கினார்.

இன்று அதிகாலை காலை 4.30 மணி அளவில் திடீரென செல்போன் வெடித்துள்ளது. இதனால் சில நிமிடங்களிலேயே குணா பிரதான் உயிர் பிரிந்தது. ஏதோ சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே ஜெகந்நாத் டிரக் ஓனர்ஸ் அசோசியேஷன் தலைவர் சாய்லா சந்திர ஜெனாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்று பார்த்த பின் ஜெகத்சிங்பூர் காவல் நிலையத்திற்கு அதிகாலை 5 மணி அளவில் தகவல் தெரிவித்தார்''.

இவ்வாறு போலீஸார் தெரிவித்தார்.

செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஜெகத்சிங்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளர். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x