Last Updated : 11 Nov, 2019 06:05 PM

 

Published : 11 Nov 2019 06:05 PM
Last Updated : 11 Nov 2019 06:05 PM

காங்.-என்சிபியுடன் கைகோக்கும் சிவசேனா: தீவிர இந்துத்துவா கொள்கையில் சமரசம் செய்யுமா? அக்னிப் பரீட்சையில் உத்தவ் தாக்கரே

மும்பை

மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு மாற்றாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியுள்ள சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தால் தன்னுடைய தீவிர இந்துத்துவா உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் எதிர்கால அரசியல் எந்த மாதிரியான விளைவுகளை, முடிவுகளைச் சந்திக்கப் போகிறது, இது உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு அக்னிப் பரீட்சை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

புகைப்படக் கலை மீது தீராக் காதலில் இருந்த உத்தவ் தாக்கரே புகைப்படக் கலைஞராகவும், அது தொடர்பான துறையிலும் தன்னை வளர்த்துக் கொள்ளவே ஆர்வமாக இருந்தார். அதனால்தான் 20 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் சவுராங் என்ற விளம்பர நிறுவனத்தைத் தொடங்கி அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லாத வகையில் ஒதுங்கியே இருந்தார்.

மனைவி ராஷ்மி, மகன்கள் ஆதித்யா, தேஜாஸ் என அரசியல் வாசனையின்றி மும்பை வாசியைப் போன்றே உத்தவ் தாக்கரே இருந்தார். எப்போதாவது தந்தை பால் தாக்கரேவுக்கு அரசியலில் உதவிகள் செய்தாலும் தாமரை இலை நீர்போலவே உத்தவ் இருந்தார்.

இந்திரா காந்திக்கு அரசியலில் உதவச் சென்ற ராஜீவ் காந்தியை அரசியல் எவ்வாறு வாரி அணைத்துக் கொண்டதோ அதுபோலவே தந்தை பால் தாக்கரேவுக்கு சின்னச் சின்ன உதவிகளைச் செய்துவந்த உத்தவ் தாக்கரேவுக்கு அரசியல் வாசம் ஏற்றப்பட்டது. மெல்ல மெல்ல கட்சிக்குள் வந்த உத்தவ் தாக்கரே தந்தையின் அரசியல் அரிச்சுவடிகளைக் கற்றுத் தேர்ந்து, அவரின் மறைவுக்குப் பின் தற்போது சிவசேனாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

1995-1999 ஆம் ஆண்டுக்குப் பின் நாராயண் ராணே, மனோகர் ஜோஷி ஆகியோரைத் தவிர மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து எந்த முதல்வரும் வரவில்லை. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதற்கான சூழலை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே உருவாக்கியுள்ளார்.

இதற்காக தனது 25 ஆண்டுகாலக் கூட்டாளியான பாஜகவை பகைத்துக் கொள்ளவும், உறவை முறித்துக் கொள்ளவும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தயாராகிவிட்டார் என்பதே நிதர்சனம்.

பாஜகவுடனான பங்கீடு அரசியல் முடிவுக்கு வராத நிலையில், சிவசேனா முதல்வர் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்பதற்காக, அரசியல் களத்தில் கொள்கை ரீதியாக நேர் எதிரிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முடிவில் இருக்கிறார். இன்று இரவு 7.30 மணிக்குள் அதற்கான முடிவை அறிவிக்கவும் ஆளுநர் கெடு விதித்திருக்கிறார்

105 எம்எல்ஏக்களுடன் இருந்த பாஜகவால் அமைக்க முடியாத ஆட்சியை 56 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் சிவசேனா அமைத்து விடுமா? என்பதுதான் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும். இதற்கு ஒரே பதில் பாஜக இல்லாத ஆட்சி நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ், என்சிபியின் நோக்கமும், முதல்வர் பதவிக்காகக் காத்திருக்கும் சிவசேனாவும் நோக்கமும் ஒரு நேர்புள்ளியில் சந்திப்பதுதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சிவசேனாவும், பாஜகவும் பெயரளவில் மட்டும்தான் வேறுபட்டுள்ளார்களே தவிர கொள்கை ரீதியாக இரு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். பாஜக தீவிரமாக முன்னெடுத்து அரசியல் செய்த காஷ்மீர் 370-வது பிரிவு நீக்கம், அயோத்தி விவகாரம், முத்தலாக் தடை சட்டம், இந்துத்துவா, தேசியவாதம், மராத்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சிவசேனா தோளோடு தோள் கொடுத்து ஆதரவு அளித்தது.

நாடாளுமன்றத்திலும் பாஜவுடன் இணைந்து செயல்பட்டது சிவசேனா. கொள்கைரீதியாக பாஜகவுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமலும் சிவசேனா கடந்த கால அரசியலில் பயணித்துள்ளது. ஆனால், இந்த விவகாரங்களில் இருந்து முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்து அரசியல் செய்துவரும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தற்போது கைகோக்கக் காத்திருக்கிறது.

சித்தாந்த ரீதியாக, கொள்கை ரீதியாகக காங்கிரஸ், என்சிபி கட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது சிவசேனா என்பதை அறிய வேண்டும். அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய தேசியக் கட்சியான பாஜகவை எதிர்க்கும் மனநிலைக்கும் உத்தவ் தாக்கரே வந்துவிட்டார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உத்தவ் தாக்கரே அரசியலில் புதிய பயணத்துக்குத் தயாராகியுள்ளார். இனி, உத்தவ் தாக்கரே அரசியலில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு நகர்வும் தன்னை ஒரு முதிர்ச்சியடைந்த, தகுதியான தலைவர், புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்.

காங்கிரஸ் போன்ற தேசிய அரசியல் கட்சியுடன் கூட்டணி வைக்கும் முடிவுள்ள உத்தவ் தாக்கரே, எவ்வாறு சோனியா காந்தியைச் சமாதானம் செய்து ஆதரவைப் பெறுவார் என்ற கேள்வியும் எழுகிறது.

காங்கிரஸ் தலைமையிடம் ஆதரவைப் பெறுவதற்காக உத்தவ் தாக்கரே தனது வழக்கமான தீவிர இந்துத்துவா கொள்கையைத் தளர்த்த முன்வருவாரா? அல்லது சிவசேனா இதுநாள் வரை பின்பற்றி வந்த சித்தாந்தங்கள், கொள்கைகளை ஆட்சிக்காக அனுசரித்துச் செல்வாரா? என்பது வரும் காலங்களில் தெரியவரும்.

சிவசேனா இந்துத்துவா கொள்கை முதல் அனைத்து விதமான கொள்கைகளில் பிடிப்புடன் இருந்து வருவதால், மகாராஷ்டிராவில் அந்தக் கட்சிக்கென்று இன்னும் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்து வருகிறது. அந்தக் கொள்கைகளை காங்கிரஸ், என்சிபியுடன் சேர்ந்தபின் சிவசேனா தளர்த்தும்போது அதனால் ஏற்படப்போகும் எதிர்கால அரசியல் மாற்றங்களையும், விளைவுகளையும் உத்தவ் தாக்கரே சந்திக்க நேரிடும்.

மேலும், தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக நேரடி தேர்தல் அரசியல் களத்துக்கு வந்திருக்கும் முதல் முறையாக எம்எல்ஏவாகியுள்ள ஆதித்யா தாக்கரேவுக்கு முதல்வர் பதவியைக் கேட்டுப் பெறுவாரா? அல்லது முதல்வர் பதவியில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் அதை விட்டுக்கொடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனென்றால் முதல் முறையாக எம்எல்ஏவாகவும், அரசியல் முதிர்ச்சி, அனுபவம் இல்லாத ஆதித்யா தாக்கரேவை முதல்வராக்க காங்கிரஸ், என்சிபி கட்சிகள் முன்வருமா? எதிர்ப்பு தெரிவித்தால் இந்த விவகாரத்தை எவ்வாறு உத்தவ் தாக்கரே கையாள்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

என்னதான் உத்தவ் தாக்கரே தனது அரசியல் முதிர்ச்சி, புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி பிரச்சினைகளைச் சமாளித்தாலும், இதுவரை அமைதி காத்த பாஜக நிச்சயம் இனிமேல் அமைதியாக இருக்கப் போவதில்லை. அடிபட்ட புலியாக சிவசேனாவிடம் எதிர்ப்பைக் காண்பிப்பார்கள்.

பல்வேறு மாநிலங்களில் பாஜக செய்த ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளைச் செய்தால், சிவசேனாவின் ஆட்சியை உத்தவ் தாக்கரே எவ்வாறு பாதுகாப்பார், மீட்பார், தன்னுடைய எம்எல்ஏக்களை எவ்வாறு பாதுகாத்து வைத்துக் கொள்ளார் என்பதும் உத்தவ் முன்னுள்ள பெரிய கேள்வியாகும்.

ஆகவே இனிமேல் உத்தவ் தாக்கரே அரசியலில் எடுத்துவைக்கப் போகும் ஒவ்வொரு அடியும் மாநில அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் உற்று நோக்கப்படும். முடிவு தவறாக இருக்கம் பட்சத்தில் எதிர்காலத்தில் அதற்கான விலையையும் கொடுக்க வேண்டி இருக்கும், இழப்புகளையும் அவர் சந்திக்க வேண்டி இருக்கும்.

போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x