Published : 11 Nov 2019 04:37 PM
Last Updated : 11 Nov 2019 04:37 PM

ஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர் கோயிலுக்கே வழங்குகிறோம்: ஜாமியாத் உலீமா ஹிந்த் அமைப்பு

அயோத்தி

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோயிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலிமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி-ராம ஜென்ம பூமி வழக்கில் இந்த அமைப்பும் முஸ்லிம்கள் தரப்பில் இருந்தது. இந்நிலையில் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் கூறும்போது, “பாபர் மசூதி நிலத்துக்காகவே சட்ட ரீதியாக வழக்காடினோம். வேறொரு நிலத்துக்காக அல்ல. வேறு எங்கும் மசூதிக்காக எந்த ஒரு நிலமும் எங்களுக்குத் தேவையில்லை. இந்த 5 ஏக்கர் நிலத்தையும் கூட ராமர் கோயிலுக்கு வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

“நாங்கள் நிலம் வாங்கி அதில் மசூதிக் கட்டிக் கொள்ள முடியும். நாங்கள் எந்த ஒரு அரசையும் இதற்காக நம்பியில்லை. நீதிமன்றமோ, அரசோ எங்கள் உணர்வுகளை மட்டுப்படுத்த வெண்டும் என்று விரும்பினால் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட அந்தப் பகுதிக்குள்ளேயே தர வேண்டும்” என்று மவுலானா ஜலால் அஷ்ரப் என்ற உள்ளூர் மதகுரு தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி என்பவர் கூறும்போது, “அவர்கள் எங்களுக்கு நிலம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால், எங்கள் வசதிக்கேற்பவே அளிக்க வேண்டும். அதாவது அந்த 67 ஏக்கர் நிலப்பகுதியில்தான் அளிக்க வேண்டும்” என்றார்.

அயோத்தியில் உள்ள முஸ்லிம் சமூக ஆர்வலர் டாக்டர் யூசுப் கான், “எங்கள் சமயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அயோத்தியில் நிறைய மசூதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் சார்பாக தீர்ப்பளித்து விட்டதால் இனி இந்த விவகாரம் முடிந்த ஒன்று” என்றார்.

அனைத்திந்திய மில்லி கவுன்சில் அமைப்பின் பொதுச் செயலாளர் காலிக் அகமட் கான் கூறும்போது, “அரசு அந்த 67 ஏக்கர் நிலப்பகுதிக்குள் எங்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும். அதில் மொத்தம் 16 மனைகள் உள்ளன. இதில் முன்னாள் பாபர் மசூதி மற்றும் ஷிலன்யாஸ் ஆகியவை அடங்கும். இதில் இடுகாடு ஒன்றும் உள்ளது. நான்கு குவாநாதி மசூதி, 18-ம் நூற்றாண்டு சூஃபி புனிதர் காஸி குத்வா என்பாரது கல்லறை மாடம் ஆகியவையும் அடங்கும். இவற்றில் சில அழிக்கப்பட்டுவிட்டது” என்றார்.

அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஹாஜி ஆசாத் அகமட் கூறும்போது, “பாபர் மசூதிக்கு மாற்றாக எங்களுக்கு வேறு நிலம் தேவையில்லை. எங்களுக்கு நில நன்கொடை தேவையில்லை” என்றார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x