

புதுடெல்லி
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்த பின்பும் பாஜக அரசின் மத்திய அமைச்சரவையில் தொடர்வது முறையாகாது. ஆதலால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று சிவசேனா கட்சியின் எம்.பி. அரவிந்த் சாவந்த் தெரிவித்தார்
மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தனித்தனியாகப் பார்த்தால் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கும் 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 288 இடங்களில் 145 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை.
ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும், பாஜகவும் போட்டியிட்டதால் இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. இதையடுத்து, சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது.
இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி நேற்று இரவு அழைத்தார். இன்று இரவுக்குள் முடிவை அறிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் சிவசேனா இறங்கியுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகினால்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. இதனால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் புதுடெல்லியில் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " நான் வகித்து வந்த கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். ராஜினாமா கடிதத்தையும் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்த பின்பும், பாஜக தலைமையிலான அமைச்சரவையில் தொடர்வது முறையாகாது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு தருவதாக பாஜக வாக்களித்துவிட்டு தற்போது இல்லை என்று பொய் பேசுவதால்தான் சிவசேனா கட்சி உறவை முறித்துக் கொண்டுள்ளது.
பொய்களால் எங்கள் கட்சியையும் தாக்கரே குடும்பத்தினரையும் பாஜக வேதனைப்படுத்தியுள்ளது. இனியும் அவர்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதால், பதவியை ராஜினாமா செய்தேன். சிவசேனா உணர்வுகளை மட்டுமல்ல, தாக்கரே குடும்பத்தாரின் உணர்வுகளையும் பாஜக காயப்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.
பிடிஐ