

ஜெய்ப்பூர்
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைக்க ஆதரவு தருவது குறித்து முடிவெடுப்பதற்காக டெல்லியில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க ஜெய்ப்பூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர்.
மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பாஜக – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.
இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்து விட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயன்று வருகிறது. அந்த கட்சிகளின் நிர்வாகிகளை சிவசேனா தலைவர்கள் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில மூத்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
ஆட்சியமைக்க மிலிந்த் தியோரா போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சஞ்சய் நிருபம் போன்றோர் சிவசேனாவுக்கு ஆதரவு தர எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் புதிய அரசில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என கருதுகின்றனர்.
எனவே மகாராஷ்டிர அரசியல் நிலவரம் மட்டுமின்றி தேசிய அரசியல் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால் அவசரப்பட வேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தை அறிந்த பிறகு மாலை மீண்டும் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் மாலை 4 மணியளவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவுகான், அசோக் சவான், பாலசாகேப் தோரட், அவினாஷ் பாண்டே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநில மூத்த தலைவர்களும் அங்கு தான் தங்கி இருந்தனர். கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளதையடுத்து அவர்கள் ஜெய்ப்பூரில் இருந்து அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் கருத்தை கேட்ட பிறகு இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.