Published : 11 Nov 2019 02:08 PM
Last Updated : 11 Nov 2019 02:08 PM

சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்குமா என்சிபி? காங்கிரஸ் முடிவுக்காகக் காத்திருக்கும் சரத் பவார்

மும்பை

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் அமைய இருக்கும் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முடிவைப் பொறுத்தே தாங்கள் முடிவு எடுப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அதேசமயம், மாநில மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மாற்று முடிவை எடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லை எனக் கூறி பாஜக மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் 56 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் இருக்கிறது.

சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்று காலை முதல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் இரு விதமான கருத்துகள் இருப்பதால், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக 2-வது கட்ட ஆலோசனையில் அந்தக் கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இன்று மாலைதான் முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சிவசேனாவுக்கு ஆதரவு அளித்தால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தேசிய அளவில் அரசியல் செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று கட்சிக்குள் ஒருதரப்பினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். சிவசேனாவும் பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சி மற்றொரு புறம் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பது, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் சிக்கல்களைக் கொண்டுவரும் என்று அந்தக் கட்சியில் ஒருதரப்பினர் கருதுகின்றனர்.

இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''சிவசேனாவுக்கும் என்சிபிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சில முக்கிய விஷயங்களில் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கி கருத்தொற்றுமை வர வேண்டும்.

மாநிலத்தின் மக்கள், விவசாயிகள் நிலையைக் கருத்தில் கொண்டு மாற்று முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. நாங்கள் காங்கிரஸ் கட்சியின் முடிவை எதிர்பார்த்து இருக்கிறோம். எங்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டால் அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.

அதேசமயம், ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமை முடிவு அறிவிக்காத வரை என்சிபி கட்சி தனது முடிவை அறிவிக்காது. காங்கிரஸ் முடிவைப் பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். தேர்தலில் இருவரும் ஒன்றாகப் போட்டியிட்டதால், ஒன்றாகவே முடிவெடுப்போம்.

நாங்கள் மாற்று அரசு அமையத் தயாராக இருக்கிறோம். ஆனால், தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியுடன் இருப்பதால், அவர்களோடு சேர்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும்".

இவ்வாறு நவாப் மாலிக் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x