கச்சேகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கச்சேகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட காட்சி : படம் ஏஎன்ஐ
கச்சேகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

ஹைதராபாத்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கச்சேகுடா ரயில் நிலையத்தில் இன்று காலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 6 பேர் காயமடைந்தனர்.

சிக்னல் கோளாறால் இரு ரயில்களும் ஒரே தடத்தில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது. இரு ரயில்களும் குறைந்த வேகத்தில் வந்ததால், பெரிய அளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

குர்னூல் நகரில் இருந்து ஹூன்ட்ரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும், புறநகர் ரயிலும் இன்று காலை 10.30 மணி அளவில் கச்சேகுடா ரயில் நிலையத்துக்கு வந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக இரு ரயில்கள் செல்லவும் ஒரே வழித்தடத்தில் சிக்னல் கிடைத்துள்ளது.

ஆனால், இரு ரயில்களும் ஒரே தடத்தில் வந்ததால், ரயில் இன்ஜின் டிரைவர் திடீரென ரயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. ரயில் நிலையம் என்பதால் இரு ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன .

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு ஓஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்னலில் ஏற்பட்ட கோளாறும், ஒரே தடத்தில் இரு ரயில்கள் வந்ததால், எழுப்ப வேண்டிய அபாய ஒலியும் ஒலிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து அறிந்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், "ஹைதராபாத் ரயில் விபத்து குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். தேவையான உதவிகளைச் செய்யவும், மீட்புப் பணிகளைச் செய்யவும், பணிகளைப் பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான உதவிகளை ரயில்வே நிர்வாகம் வழங்கும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in