அயோத்தி வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு; சரயூ நதியில் நாளை 5 லட்சம் பேர் புனித நீராடல்

அயோத்தி வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்வு; சரயூ நதியில் நாளை 5 லட்சம் பேர் புனித நீராடல்
Updated on
1 min read

அயோத்தி

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் கோயில் கட்டுவதற்கான திட்டத்தை 3 மாதத்தில் உருவாக்குவதுடன், ஒரு அறக்கட்டளையை தொடங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் அயோத்தி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அங்கு வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நாளை இங்கு வட இந்திய கால கணிப்புபடி, கார்திகை மாத பெளர்ணமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரயூ நதியில் நாளை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா கூறியதாவது:

கார்த்திகை பெளர்ணமி கொண்டாடப்படுவதையொட்டி அயோத்தியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வழக்கமாக நாளொன்றுக்கு 8 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவர். விழாக்காலங்களில் 50 ஆயிரம் பேர் வரை வருகை தருவார்கள். அயோத்தி தீர்ப்புக்கு பிறகு பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நாளை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அயோத்திக்கு வர வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்துள்ளோம். மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்திக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தங்குமிடம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in