Published : 11 Nov 2019 12:12 PM
Last Updated : 11 Nov 2019 12:12 PM

சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்குமா என்சிபி கட்சி? பிடி கொடுக்காத சரத் பவார்

மும்பை

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து முடிவு எடுக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்த பாஜக-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதிலும், முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதிலும் முரண்பாடு நிலவியதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

இதையடுத்து, மாநிலத்தில் 105 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரிஅழைத்தார். ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பை பாஜக நிராகரித்தது. இதைத் தொடர்ந்து சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

ஆனால், சிவசேனாவிடம் 56 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது. சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அவசரமாக காரியக் கமிட்டி கூட்டத்தை டெல்லியில் கூட்டி விவாதித்து வருகிறது.

அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசி முடிவு எடுக்க உள்ளார்.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று பிற்பகலில் சந்தித்துப் பேச சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சிவசேனா ஆட்சி அமைக்க என்சிபி ஆதரவு அளிக்குமா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு சரத்பவார் பதில் அளிக்கையில், " சிவசேனா கட்சியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தது தொடர்பாக எங்கள் கட்சிக்குள் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தவில்லை. தேர்தலில் என்சிபியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட்டன. ஆதலால் எந்த முடிவாக இருந்தாலும் இரு கட்சிகளும் சேர்ந்துதான் எடுக்க முடியும். ஆதலால் காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

இதனால், சிவசேனா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x