Published : 11 Nov 2019 11:16 AM
Last Updated : 11 Nov 2019 11:16 AM

வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சஞ்சய் ராவத் திட்டவட்டம்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

மும்பை

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் அளித்த வாக்குறுதியை பாஜக காப்பாற்றாவிட்டால், இனிமேலும் அந்தக் கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதில் அர்த்தமில்லை என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தனித்தனியாகப் பார்த்தால் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கும் 56 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆட்சி அமைக்க 288 இடங்களில் 145 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை.

ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும், பாஜகவும் போட்டியிட்டதால் இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. இதையடுத்து, சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது.

இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி நேற்று இரவு அழைத்தார். இன்று இரவுக்குள் முடிவை அறிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் சிவசேனா இறங்கியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மகாராஷ்டிர மக்கள் அளித்த தீர்ப்பை பாஜக அவமதித்துவிட்டது. ஆட்சி அதிகாரத்தை சரிபாதியாகப் பிரித்துக்கொள்வது தொடர்பாக மக்களவைத் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை தற்போது மீறி பாஜக நடக்கிறது.

பாஜகவின் அகங்காரத்தால்தான் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பமாக இருக்கிறது. முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்ற பாஜகவின் அகங்காரம்தான் சூழலை இந்த அளவுக்கு மோசமாக்கி இருக்கிறது.

எங்களிடம் அளித்த வாக்குறுதியை பாஜக காப்பாற்ற முடியாவிட்டால், இனிமேல் அந்தக் கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதில் அர்த்தமில்லை.

அதேசமயம், ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த நிலையில் நாங்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஏன் ஆட்சி அமைக்கக்கூடாது?

பாஜகவுக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி 72 மணிநேரம் அவகாசம் அளித்தார். ஆனால், சிவசேனாவுக்கு வெறும் 24 மணிநேரம் மட்டுமே அவகாசம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து மகாராஷ்டிர மாநிலத்தின் நலனுக்காகக் குறைந்த செயல்திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்கிறேன். சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் மகாராஷ்டிரத்தின் நலனுக்காகச் செயல்பட ஒப்புக்கொண்டிருக்கின்றன''.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x