

புதுடெல்லி
இன்றுபோல் அல்லாமல் தேர்தல் ஆணையர்கள் பாகுபாடு இல்லாமல் செயல்பட்ட காலம் ஒன்று இருந்தது என டி.என்.சேஷன் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணைய வரலாற்றில் சிறப்பாகச் செயல்பட்டவருமான மகசேசே விருது பெற்ற டி.என்.சேஷன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் ‘‘இன்றுபோல் அல்லாமல் தேர்தல் ஆணையர்கள் பாகுபாடு இல்லாமல், மரியாதைக்குரியவர்களாக, தைரியமிக்கவர்களாக, பயமற்றவர்களாக செயல்பட்ட காலம் இருந்தது.
அவர்களில் ஒருவர் தான் டி.என்.சேஷன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.