Published : 11 Nov 2019 10:45 AM
Last Updated : 11 Nov 2019 10:45 AM

மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்: காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்கிறார் சஞ்சய் ராவத்?

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் சிவசேனா கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஆதரவு கோரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், தனித்தனியாகப் பார்த்தால் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கும் 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 288 இடங்களில் 145 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை.

ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும், பாஜகவும் போட்டியிட்டதால் இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசவில்லை. இதையடுத்து, சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது.

இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி நேற்று இரவு அழைத்தார். இன்று இரவுக்குள் முடிவை அறிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் சிவசேனா இறங்கியுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகினால்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. இதனால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த சூழலில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது. மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகப் பேச உள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆதரவு கோர சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று பிற்பகலில் சஞ்சய் ராவத் டெல்லி செல்ல உள்ளார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் எந்தவிதமான தகவலும் இல்லை.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x