

புதுடெல்லி
அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் 5 நீதிபதிகளும் நேற்று முன்தினம் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த 5 நீதிபதிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, நீதிபதிகளின் வீடுகளுக்கான பாதுகாப்பு பணியில் கூடுதல் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடைய வீடுகளுக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு, நீதிபதிகளின் வீடுகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இப்போது, அவர்கள் வெளியில் செல்லும்போது ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நீதிபதிகளின் வாகனங்களுடன் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய வீரர்களுடன் கூடிய மற்றொரு வாகனமும் செல்லும்.