

புதுடெல்லி
மிக நீண்டகாலமாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த தீர்ப்பை அளிக்கும்போது, அரசமைப்புச் சட்டத்தின் 142-வது விதியை நீதிபதிகள் இரண்டு முறை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த 142-வது விதியானது, உச்ச நீதிமன்றத்துக்கு சில அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதாவது, ஒரு வழக்கில் அல்லது விவகாரத்தில் முழுமையான தீர்ப்பை உறுதி செய்வதற்காக எந்த உத்தரவையும் (சட்ட விதிகளுக்கு அப்பால்) பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விதி, அதிகாரம் அளித்துள்ளது.
அதன்படி, அயோத்தி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முஸ்லிம்களுக்கு மசூதி அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தை வழங்க, 142-வது விதியை பயன்படுத்தியே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அமைக்கவுள்ள அறக்கட்டளையில் நிர்மோஹி அகாடாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் 142-வது விதிக்கு உட்பட்டே நீதிபதிகள் பிறப்பித்தனர்.