

நொய்டா
இந்தியாவில் கடந்த 12-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை முகலாய மன்னர்கள் ஆட்சி நடைபெற்றது. முகலாய மன்னர் பரம்பரையின் வாரிசு, இளவரசர் யாகூப் ஹபியுதீன் டுஸ்சி உத்தர பிரசேத்தில் வசித்து வருகிறார். இவர் பகதூர் ஷா ஜாபரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். எனது பங்களிப்பாக கோயில் கட்ட தங்க செங்கல் வழங்குவேன் என்று யாகூப் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து இளவரசர் யாகூப் நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். எனது விருப்பம் நிறைவேறியுள்ளது. குறிப்பிட்ட இடம் சன்னி வக்பு வாரியத்துக்கு சொந்தமானது கிடையாது. முகலாய மன்னர் பரம்பரையை சேர்ந்த எனக்கே சொந்தம். அந்த இடம் என் வசம் இருந்திருந்தால் அப்போதே மத்திய அரசிடம் வழங்கியிருப்பேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தங்க செங்கல் வழங்குவேன் என்று ஏற்கெனவே உறுதி அளித்துள்ளேன். இப்போது உச்ச நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ராமர் கோயிலுக்காக நிச்சயமாக தங்க செங்கல் வழங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.