

கொல்கத்தா
வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ‘புல்புல்' புயல், மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது.
புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் கனமழையால், கொல்கத்தா உட்பட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. ‘புல்புல்' எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல், ஒடிசாவை தாக்கும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தை நோக்கி அது நகரத் தொடங்கியது. இதுதொடர்பான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால், மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையேயான கடற்கரையில், மணிக்கு சுமார் 135 கி.மீ. வேகத்தில் நேற்று முன்தினம் இரவு ‘புல்புல்' புயல் கரையைக் கடந்தது. இரவு 8.30 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரை, புயல் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த போது, மேற்கு வங்கத்தின் தென் பகுதிகளில் பயங்கர சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, தலைநகர் கொல்கத்தா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணி வரை மிக பலத்த மழை பெய்தது.
மழை காரணமாக கொல்கத்தா மற்றும் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சூறைக் காற்றால், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்தன. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், மரங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் சரிந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் கொல்கத்தா மாநகராட்சி ஊழியர்களும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், மின் கம்பங்களை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
‘புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 5 பேரும், கொல்கத்தாவில் 2 பேரும் பலியாகியுள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், வங்கதேசத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
புயல் சேத ஆய்வு - மம்தா
மேற்கு வங்கத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவில் பார்வையிடவுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘புல்புல்' புயல் மேற்கு வங்கத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. புயல் சேதங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை விரைவில் பார்வையிடவுள்ளேன் என அந்தப் பதிவில் மம்தா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆலோசனை
இதனிடையே, புயல் பாதிப்புகள் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மேற்கு வங்கத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி உறுதியளித்தார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- பிடிஐ