Published : 11 Nov 2019 08:02 AM
Last Updated : 11 Nov 2019 08:02 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகின் மிக உயரமான 111 அடி சிவலிங்கம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உதயம் செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம்.படம்: எல்.மோகன்

எல்.மோகன்

நாகர்கோவில்

உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்கமே உலகின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம் அந்த பெருமையை பெறுகிறது.

இந்த சிவலிங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்து, அதன் உட்பகுதியில் பக்தர்கள் சென்று பார்க்கும் வகையில் கட்டமைப்பு பணி நடந்தபோதே, இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, ஆசியா புக் ஆப் ரிக்கார்டு ஆகிய புத்தகங்களில் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என இடம்பெற்றுவிட்டது. இந்த சிவலிங்கம் மக்கள் பார்வைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி சிவலிங்கத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பிரம்மாண்ட சிவலிங்கத்தை வழிபட்டனர்.

லிங்கத்தினுள் சிற்பங்கள்இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “உலகிலேயே உயரமான 111.2 அடி உயரம், தரையில் உள்ள பீடம் 13 மீட்டர் சுற்றளவு கொண்ட சிவலிங்கத்தை உருவாக்கும் பணி கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது.

தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொண்டோம். சிவலிங்கத்தின் உட்பகுதி 8 மாடிகளைக் கொண்டு குகை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசிக்கலாம். உட்பகுதி நடைபாதை ஓரங்களில் சித்தர்கள், சிவனடியார்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 108 சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. லிங்கத்தின் உட்பகுதியில் 8-வது நிலையில் கைலாச மலையில் சிவன், பார்வதி பக்தர்களுக்கு அருட்காட்சி தருவது போன்ற சிற்பம் கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தந்த நன்கொடைகள் மூலம் இந்த சிவலிங்கம் அமைக்கப்பட்டது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x