Published : 11 Nov 2019 07:24 AM
Last Updated : 11 Nov 2019 07:24 AM

3 மாதங்களில் அறக்கட்டளையை நிறுவ முடிவு; ராமர் கோயில் பணி ஏப்ரலில் தொடங்கும்: 5 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டம்

அயொத்தி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டு வதற்காக வரும் ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு (விஎச்பி) தயாரித்துள்ள வடிவமைப்பை பின்பற்றினால், ராமர் கோயில் கட்ட 5 ஆண்டு கள் ஆகும் என கூறப்படுகிறது.

அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் கோயில் கட்டுவதற்கான திட்டத்தை 3 மாதத்தில் உருவாக்குவ துடன், ஒரு அறக்கட்டளையை தொடங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ராமர் கோயிலுக்கான ஒரு வடிவமைப்பை விஎச்பி அமைப்பு ஏற்கெனவே உருவாக்கி உள்ளது. அத்துடன், கோயில் கட்டு மானத்துக்கு தேவையான சிற்பங் கள் அடங்கிய கற்தூண்கள், உத் தரம் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

விஎச்பி வடிவமைப்பின்படி, கோயிலின் உயரம் 128 அடி, அகலம் 140 அடி, நீளம் 270 அடியாக இருக் கும். மொத்தம் 212 கற்தூண் கள் தேவைப்படும் என கணிக்கப் பட்டுள்ளது. இதில் இதுவரை 106 தூண்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சிற்பக் கலைஞர் ரஜ்னிகாந்த் சோம்புரா கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். அதன் பிறகு சிற்பக் கலைஞர் யாரும் நிய மிக்கப்படவில்லை. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாக இருந்ததையடுத்து, பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அங்கு பணிபுரிந்த அனைவரும் சொந்த ஊர் திரும்பினர்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான பணிகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி அமைப் புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராம நவமி வருகிறது. அன்றைய தினம் அடிக்கல் நாட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, ராமர் கோயில் பணிமனையின் கண்காணிப்பாளர் அன்னுபாய் சோம்புரா கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வெளியாகிவிட்ட நிலையில், கோயில் கட்டுமானப் பணிகள் இனி வேகமெடுக்கும். அதேநேரம், பணி கள் தொடங்கினால், குறைந்தபட் சம் 250 சிற்பக் கலைஞர்கள் தேவைப் படுவார்கள். கோயிலை கட்டி முடிக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும்” என்றார்.

1984-ம் ஆண்டு ராமர் கோயி லுக்கு அடித்தளம் அமைப்பதற் கான பூஜை நடைபெற்றது. இந்தக் கோயில் கட்டுவதற்காக முதன் முதலில், பக்தர்களிடமிருந்து ஒரு ரூபாய் 25 காசுகள் நன் கொடையாக பெறப்பட்டது. இதுவரை ரூ.8 கோடி வசூலாகி உள்ளது என விஎச்பி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அறக்கட்டளை

ராமர் கோயில் கட்டுவதற் காக, சோமநாதர் கோயில் அறக்கட்டளை போல ஒரு அறக்கட்டளை தொடங்கப் படும் என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 7 பேர், சோமநாதர் கோயில் அறக் கட்டளை வாரியத்தின் உறுப் பினர்களாக உள்ளனர். இது போல ராமர் கோயில் அறக் கட்டளை வாரிய உறுப் பினர்களாக இவ்விருவரும் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத்தினர் கூறும்போது, “குளிர் கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக புதிய மசோதா தாக் கல் செய்யப்படும். அதில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி அறக் கட்டளை அமைப்பதற்கான விதி முறைகள் இடம்பெறும். அடுத்த 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை நிறுவப்படும்.

அதன் பிறகு அதில் யார் யார் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆகியோர் அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தன. இந்த அறக்கட்டளை மத்திய கலாச்சார துறையின் கட்டுப்பாட் டில் இருக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x