Published : 10 Nov 2019 06:53 PM
Last Updated : 10 Nov 2019 06:53 PM

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக மறுப்பு; ஆளுநர் அழைப்பை நிராகரித்தது: சிவசேனா மீது குற்றச்சாட்டு

மும்பை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள பாஜக, பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆனால், ஆட்சியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மனக்கசப்பால் இரு கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

தேர்தல் முடிந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும், பாஜக, சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது குறித்த பேச்சு தொடங்கவில்லை. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா முரண்டு பிடிக்க, முதல்வர் பதவி பற்றிய பேச்சுக்கே வாய்ப்பில்லை என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்தது.

சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த, 105 எம்எல்ஏக்கள் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நேற்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏக்கள் தேவை. தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதர கட்சிகளைச் சேர்த்தால்கூட 130 எம்எல்ஏக்களைத் தாண்டுவது கடினம்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று காலை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்கந்திவார், பங்கஜ் முண்டே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசித்தனர். ஆனால், எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. மாலையில் பாஜக மத்திய தலைமையிடம் இருந்து வரும் தகவலையடுத்து ஆளுநரிடம் முடிவை அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி பாஜக தலைமையிடம் இருந்து வந்த தகவலைத் தொடர்ந்து மீண்டும் மாலையில் காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லை என்பதால், ஆளுநர் அழைப்பை நிராகரிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு அந்தத் தகவலை ஆளுநரிடம் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

தேவேந்திர பட்னாவிஸ், மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்கந்திவார் உள்ளிட்டோர் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று, தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்ற தகவலைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், " உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி முதல்வர் பதவி கேட்டுப் பிடிவாதம் செய்கிறது. இது சிவசேனா, பாஜக சேர்ந்து அமைந்த கூட்டணிக்கு மக்கள் அளித்த வாக்குக்கு அவமதிப்பு செய்வதாகும்.

மகாராஷ்டிரா மக்கள் பாஜக-சிவசேனா கூட்டணிக்குத்தான் வாக்களித்துள்ளார்கள். ஆனால், சிவசேனா கட்சி மக்களின் தீர்ப்பை உதாசினப்படுத்திவிட்டது. ஆதலால், நாங்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். இதுதொடர்பான எங்கள் முடிவை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் தெரிவித்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க சிவசேனா விரும்பினால், அவர்களுக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x