Published : 10 Nov 2019 06:16 PM
Last Updated : 10 Nov 2019 06:16 PM

ஆரம்பிச்சுட்டாங்க: சாத்தியமில்லை; நடக்கும் -ஆளுநர் அழைக்கும் முன்பே காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி மோதல்

மும்பை

மகாராஷ்டிராவில் எந்தக் கட்சி தலைமையில் ஆட்சி அமையும் என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், ஆளுநர் அழைக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சிக்குள் இப்போதே ஆட்சி அமைப்பது தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

ஆளுநர் அழைப்பை எதிர்பார்ப்பதாக மூத்த தலைவர் மிலிந்த் தியோரா கருத்து கூற, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை என்று மற்றொரு தலைவர் சஞ்சய் நிரூபம் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியையும், உட்கட்சி பூசலையும் பிரித்து வைக்கமுடியாது என்றாலும், ஆட்சி அமைப்பதற்காக வாய்ப்பு வந்தாலும் அதை ஏற்பதற்கு ஒருதரப்பினர் தயாராக இல்லை.

மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனா -பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதால், கூட்டணியாக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இதனால், மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக 105 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ஆளுநர் அழைப்பை ஏற்கலாமா அல்லது மறுக்கலாமா என்ற எண்ண ஓட்டத்தில் பாஜக இருக்கிறது. அதுதொடர்பாக பல கட்ட ஆலோசனையில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

காபந்து முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் தன்னால் ஆட்சி அமைக்க முடியும், பெரும்பான்மையை நிரூபிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் பாஜக ஒருவேளை ஆளுநர் அழைப்பை மறுக்கும் பட்சத்தில் 2-வது தனிப்பெரும் கட்சி அல்லது தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்துள்ள கட்சியை அழைப்பார். அந்த வகையில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுக்கலாம். இந்தக் கூட்டணியும் மறுக்கும் பட்சத்தில் சிவசேனாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "மாநிலத்தில் சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டால், 2-வது பெரிய கூட்டணியான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியை மகாராஷ்டிரா ஆளுநர் அழைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஆனால், இந்தக் கருத்துக்கு நேர்மாறாக, காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவர் சஞ்சய் நிருபம் ட்விட்டரில் பதில் அளித்தார்.அவர் கூறுகையில், "மாநிலத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலில் என்சிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை. எப்படியாகினும் நிலையான ஆட்சிக்கு சிவசேனா ஆதரவு தேவை. ஆனால் சிவசேனாவுடன் எந்த சூழலிலும் ஆட்சியைப் பகிர்ந்து கொள்வது குறித்து நாம் கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும். அவ்வாறு அமைந்தால் அது கட்சிக்குப் பேரழிவாக அமையும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் 44 எம்எல்ஏக்களும் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். 44 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பாலசாஹிப் தோரட், முன்னாள் முதல்வர் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், மாநிலப் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்தக் கூட்டத்தில் சிவசேனா ஒருவேளை ஆட்சி அமைக்க உரிமை கோரினால், எந்தவிதமான நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள்.

மேலும், பாஜக கூட்டணியிலிருந்து சிவசேனா விலகிய பின் தான் அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அந்தக் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சராக இருக்கும் அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்குப் பின் பேச்சில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து எம்எல்ஏக்களின் கருத்தை அறிந்த நிலையில் கட்சியின் மேலிடத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே கொண்டு செல்வார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x