Published : 10 Nov 2019 05:25 PM
Last Updated : 10 Nov 2019 05:25 PM

பாஜக முன் 2 முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார்?

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தும் அக்கட்சி தயங்கி வரும் நிலையில் அந்தக் கட்சியின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன.

முதலாவது, ஆளுநரின் வாய்ப்பை ஏற்று ஆட்சி அமைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது.

இரண்டாவது வாய்ப்பு, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் அழைப்பை நிராகரித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமரத் துணிச்சலாக முடிவு எடுப்பது. இதில் ஏதேனும் ஒரு முடிவை பாஜக எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏக்கள் தேவை. தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்களும், சிவசேனாவுக்கு 56 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் பாஜக -சிவசேனா கூட்டணியாக ஆட்சி அமைத்தால் பெரும்பான்மைக்கு அதிகமாகவே இடங்கள் இருக்கி்ன்றன. ஆனால், ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்கிறது.

அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.

இதையடுத்து மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக 106 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று ஆட்சி அமைக்கலாமா என்பது குறித்துதான் பாஜக பலகட்டங்களாக ஆலோசித்து வருகிறது. ஆனால், பாஜகவுக்கு இருப்பதோ 105 எம்எல்ஏக்கள் மற்ற இதர சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றால்கூட 130 எம்எல்ஏக்களுக்கு மேல் தாண்டாது.

முதல்வர் பதவி இல்லாமல் பாஜகவை ஆதரிக்கப் போவதில்லை என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்து வருகிறது. பாஜகவை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. இந்த சூழலில் பாஜக என்ன செய்யப்போகிறது, ஆளுநர் அழைப்பை ஏற்கப் போகிறதா அல்லது மறுக்கப்போகிறதா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதில் இரு முடிவுகளில் ஒன்றை பாஜக எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

1. சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிப்பது

ஆளுநர் பகத் சிங் அழைப்பை ஏற்று துணிச்சலாக பாஜக சார்பில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்கலாம். பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பாஜகவின் செல்வாக்கைப் பயன்படுத்தி சுயேச்சை, சிறுகட்சி எம்எல்ஏக்கள் ஆகியோரைச் சேர்த்தால் மொத்தம் 130 எம்எல்ஏக்களைத் தேற்றிவிடலாம். எப்படியாகினும், பெரும்பான்மைக்கு 10 முதல் 15 எம்எல்ஏக்கள் குறைவாக இருக்கும்.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ராமர் கோயில், 370-வது பிரிவு நீக்கிய போன்ற விவகாரத்தில் "மனசாட்சி" அடிப்படையில் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கேட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை பாஜக எதிர்கொள்ளலாம்.

இதுபோன்ற முறையில் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டால், சட்டப்பேரவையில் பாஜவுக்கு எதிராக சிவசேனா எம்எல்ஏக்களால் எதிராக வாக்களிக்க முடியாது. அதிலும் குறிப்பாக ராமர் கோயில் விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சிவேசனா கட்சியினரால், எதிராக வாக்களிக்க முடியாது.

ஏனென்றால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குடும்பத்தாருடன் அயோத்தி சென்றார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போது ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்கப் போகிறது என்று கேள்வியும் உத்தவ் தாக்கரே எழுப்பினார். தேர்தல் வெற்றிக்குப் பின், உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோர் மீண்டும் அயோத்தி சென்று, ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றவும் வலியுறுத்தினார்கள்.

ஆனால், தற்போது ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதித்துவிட்டது. இந்த சூழலில் ராமர் கோயில் பெயரில் பாஜக மனசாட்சி படி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறிய பின்பும் சிவசேனா, பாஜகவுக்கு எதிராக வாக்களித்தால், அது மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனாவின் தற்கொலை முடிவாகவே அமையும்.

அதிலும் வாக்குறுதி, உண்மை, மனசாட்சி என்றுபேசி வரும் சிவசேனா கட்சியினர் மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று பாஜக கேட்கும்போது அந்தக் கட்சி எம்எல்ஏக்களுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கும். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறக்கூடிய நிலைகூட ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

2. ஆளுநர் அழைப்பை மறுப்பது

இரண்டாவதாக ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முடிவை ஏற்க மறுத்து ஆட்சி அமைக்காமல் பாஜக தவிர்ப்பதாகும். இதனால், ஆளுநர் அடுத்த முடிவாக 2-வது பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார். அப்போது சிவசேனாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் அல்லது தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நேரத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு அளித்தால், வேறுவழியின்றி பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமரவேண்டியது இருக்கும்.

மற்றொபுபுறம் சிவசேனா வைத்திருக்கும் 56 எம்எல்ஏக்கள் மூலமும் ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தங்களுடைய 98 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, சுயேச்சை, சிறுகட்சிகளின் ஆதரவைப் பெற்றால்கூட பெரும்பான்மையான 145 எண்ணிக்கை கிடைக்காது.

மாநிலத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைவதற்கு ஒரே வழி, காங்கிரஸ், தேசியவாதக் கூட்டணிக்கு சிவசேனா ஆதரவு அளிக்க முன்வருவதாகும். சிவசேனாவைப் பொறுத்தவரை இந்துத்துவா கொள்கையில் தீவிரப் பிடிப்புள்ள கட்சி. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு உள்ள மனநிலை கொண்டது. அவ்வாறு காங்கிரஸ், என்சிபிக்கு சிவசேனா ஆதரவு அளித்தால் அரசியல் வட்டாரத்தில் தனக்கான அடையாளத்தை சிவசேனா இழக்கக்கூடும்.

அதேசமயம், காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தாலோ அல்லது சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலோ 370-வது பிரிவு, பொது சிவில் சிட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றில் சிவசேனாவை பாஜக குறிவைத்துத் தாக்கும்.

ஆதலால் பாஜக இந்த இரு முடிவுகளில் ஒன்றைக் கண்டிப்பாக எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. 2-வது முடிவை பாஜக எடுத்தால், நிச்சயம் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே ஏராளமான குழப்பங்கள் ஏற்படும். மகாராஷ்டிரா அரசியலில் நிலையில்லாத ஆட்சிக்கே வழி வகுக்கும்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x