

மும்பை
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மாலையில் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிப்போம் என்று மாநில பாஜக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
ஆட்சியில் சமபங்கை சிவசேனா கேட்டு பிடிவாதம் செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், இந்த அழைப்பை ஏற்று ஆட்சி அமைப்பதா இல்லையா எனத் தெரியாமல் பாஜக தடுமாறி வருகிறது. ஏனென்றால் பெரும்பான்மையை நிரூபிக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் இருப்பதோ 105 எம்எல்ஏக்கள்தான்.
சுயேச்சை எம்எல்ஏக்கள், சிறு கட்சிகளை வளைத்துப் போட்டாலும் 125 எம்எல்ஏக்களுக்கு மேல் தாண்டாது என்பதால், பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்கும்போது தோல்வியடையும் நிலை ஏற்படும் என்பதால் காலம் தாழ்த்துகிறது.
இந்நிலையில், காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் இன்று காலை பாஜக முக்கிய உறுப்பினர்கள் குழுக்கூட்டம் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மூத்த தலைவர்கள் கிரிஷ் மகாஜன், சுதிர் முன்கந்திவார், அஷிஸ் ஷீலர், பங்கஜா முண்டே உள்ளிட்டோர் பேசினர். ஆனால், இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தக் கூட்டம் குறித்த மூத்த தலைவர் முன்கந்திவார் கூறுகையில், "முதல்வர் இல்லத்தில் இன்று காலை 11 மணி அளவில் முக்கியத் தலைவர்கள் சேர்ந்து ஆளுநர் அழைப்பு, ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினோம்.
பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. மத்திய தலைமையின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். மத்திய தலைமையிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன், அதுகுறித்து மாலை நேரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்துவோம். அதன்பின் ஆளுநர் அழைப்பின் மீது இறுதி முடிவு எடுத்து அதை ஆளுநரிடம் தெரிவிப்போம்" என்றார்.
இதற்கிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மும்பையின் மாலட் தீவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்