Published : 10 Nov 2019 04:00 PM
Last Updated : 10 Nov 2019 04:00 PM

அயோத்தி தீர்ப்பு; 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்து வரும் 26-ம் தேதி முடிவு: சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

லக்னோ

அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் அயோத்தியில் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த நிலத்தை ஏற்பது குறித்து வரும் 26-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று சன்னி மத்திய வக்பு வாரியம் இன்று தெரிவித்துள்ளது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பாக மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என ஒருமித்த தீர்ப்பாக அறிவித்தனர்.

அதேசமயம் முஸ்லிம்களுக்கு தனியாக மசூதியை அயோத்தியில் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை உ.பி.அரசும், மத்திய அரசும் ஒதுக்கித் தர வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள சன்னி மத்திய வக்பு வாரியத்தின் தலைவர் ஜுபர் பரூக்கி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியதுபோன்று மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினால் அதை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுகின்றன.

வரும் 26-ம் தேதி வக்பு வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. மசூதி கட்டுவதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

முதலில் நவம்பர் 13-ம் தேதி இந்தக் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், ஒத்திவைக்கப்பட்டு, வரும் 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது. பல்வேறு விதமான கருத்துகள் நிலம் குறித்து எழுகின்றன. என்னைப் பொறுத்தவரை எதிர்மறை கூட நேர்மறை இருந்தால் மட்டுமே வெல்லும்.

சிலர் பாபர் மசூதி கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கும் இடத்தைப் பெறாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு ஒதுக்கினால், பகையும், எதிர்மறையான போக்கும் வளரும். அயோத்தி விவகாரத்தில் சமரசப் பேச்சின் மூலம் தீர்க்கலாம் என்று நான் கூறினேன். என்னுடைய கருத்துகள் தெளிவாக இருந்தும் அது வெற்றி பெறவில்லை.

5 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியம் எடுத்துக் கொண்டு கல்வி நிலையமும், மசூதியும் கட்ட வேண்டும் எனச் சிலர் ஆலோசனை தெரிவிக்கிறார்கள். ஆனால், நிலத்தைப் பொருத்தமட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடிதான் மத்திய அரசு நடக்கும்.

இந்த நிலத்தை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வோம். ஒருவேளை நிலத்தை எடுத்துக்கொள்வதாக வாரியம் முடிவு செய்தால், எவ்வாறு நிலத்தைப் பெறுவது, நிபந்தனைகள் குறித்தும் பேசி முடிவெடுப்போம். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாரியத்துக்கு எந்தத் திட்டமும் இல்லை’’.

இவ்வாறு பரூக்கி தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x