Published : 10 Nov 2019 03:06 PM
Last Updated : 10 Nov 2019 03:06 PM
புதுடெல்லி
புல்புல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதியளித்துள்ளனர்.
வங்கக் கடலில் அந்தமானுக்கு வடமேற்கில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள தெற்கு 24 பர்கானா மாவட்டத்தை நேற்று புல்புல் புயல் தாக்கியது.
இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த இருநாட்களாக கனமழை பெய்து வருகிறது. காற்று, மழைக்கு இதுவரை 4 பேர் பலியாகினர். ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஒடிசா மாநிலத்திலும் புல்புல் புயலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
புல்புல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தின் நிலவரம் குறித்து அறிய, முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். அதேபோல, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மம்தாவுடன் பேசி தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
உள்துறை அமைச்சகம் சார்பில் பேரிடர் மீட்புக் குழுவின் 10 குழுக்கள் உடனடியாக மேற்கு வங்கத்துக்கும், 6 குழுக்கள் ஒடிசாவுக்கும் அனுப்பி வைக்கப்படும். கூடுதலாக 18 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் கிழக்குப்பகுதி மாநிலங்களில் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. அது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு சூழலைக் கேட்டறிந்தேன். மத்திய அரசு சார்பில் அனைத்துவிதமான உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தேன். ஒவ்வொருவரின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "இந்தியாவின் கிழக்குப்பகுதி மாநிலங்களில் தாக்கிய புயல் குறித்தும், பாதிப்புகள் குறித்தும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். மாநிலத்தில் உள்ள மீட்பு அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என உறுதியளித்தேன்.
அனைத்துவிதமான தைரியத்தையும் உடல்நலத்தையும் இறைவன் வழங்க வேண்டும். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மாநில நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகள், சாலை சீரமைப்புப் பணிகள், நிவாரணப் பொருட்களை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ