Published : 10 Nov 2019 02:34 PM
Last Updated : 10 Nov 2019 02:34 PM

பாபர் மசூதி சட்டவிரோதமாக இருந்தால், ஏன் அத்வானி இடிக்க முயன்றார்?: ஒவைசி எம்.பி. கேள்வி

ஹைதராபாத்

பாபர் மசூதி சட்டவிரோதமாக இருந்தால், ஏன் அத்வானி அதை இடிப்பதற்கு முயன்றார்? அதேசமயம், பாபர் மசூதி சட்டபூர்வமாக இருந்தால் அத்வானிக்கு ஏன் நிலம் கிடைக்க வேண்டும் என்று அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ- இதிஹாதுல் முஸ்லிம் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், முஸ்லிம்களுக்கு அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வெளியானவுடன் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஹைதராபாத்தில் மிலாது நபி பண்டிகையையொட்டி கூட்டம் நடந்தது.

அதில் ஒவைசி பங்கேற்றுப் பேசியதாவது:

''பாபர் மசூதி-ராம ஜென்மபூமி நில வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தவறு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் நாட்டின் தலைமை நீதிமன்றம்தான், ஆனால், தவறிழைக்கமாட்டார்கள் என்பதில்லையே.

ஒருநபர் உங்களின் வீட்டை இடிக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் நீதிமன்றத்தில் முறையிடுகிறீர்கள். ஆனால், நீதிமன்றமோ யார் உங்கள் வீட்டை இடித்தாரோ, யார் மீது நீங்கள் புகார் கொடுத்தீர்களோ அவர்களிடமே வழங்கி விடுகிறது. உங்களுக்கு வேறு இடம் தருகிறோம், வேறு இடத்தில் வீடு கட்டிக்கொள்ளுங்கள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.

என்னுடைய அடிப்படை கேள்வி என்னவென்றால், பாபர் மசூதி சட்டவிரோதமாக இருந்தால், அத்வானியும் மற்றவர்களும் ஏன் இடிக்க முயன்றார்கள். பாபர் மசூதி சட்டபூர்வமானதாக இருந்தால், எப்படி அத்வானி தரப்பினர் இடம் பெற முடியும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நான் ஏற்காதது குறித்து பலரும் என்னை விமர்சிக்கிறார்கள். எதிர்ப்பது என்னுடைய ஜனநாயக உரிமை. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் கொடுத்து அவமதித்துவிட்டார்கள்.

பாபர் மசூதி என்பது எங்களின் சட்டபூர்வ உரிமை. நாங்கள் நிலத்துக்காகச் சண்டையிடவில்லை. கருணை அடிப்படையில் எங்களுக்கு இடம் ஏதும் தேவையில்லை. எங்களை பிச்சைக்காரர் போல் நடத்தாதீர்கள். இந்த நாட்டின் குடிமகன்கள்போல் நடத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் தரப்புக்காக வாதாடிய ராஜீவ் தவான் 80 வயதிலும் போராடியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. உண்மை என்னவென்றால், சோதனையான நேரத்தில் இந்த வழக்கை எடுத்துப் போராடியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் வழக்கிற்காக வாதாடியுள்ளார். ஆனால், இந்த வழக்கில் போராடுவதிலிருந்து காங்கிரஸ் நிறுத்திக்கொண்டது.

பாபர் மசூதி வழக்கில் போராடுவது என்பது பாஜகவுக்கும், சங் பரிவார் அமைப்புக்கும் முக்கியமானது. இதேபோன்ற ஏராளமான மசூதிகள் பட்டியலை வைத்துள்ளன. ஆனால், தங்களிடம் எந்தப் பட்டியலும் இல்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையென்றால், காசி, மதுரா மசூதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை ஏன் திரும்பப் பெறவில்லை.

மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார்கள். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தீர்ப்பில் மவுனம் காக்கின்றன. இந்தத் தீர்ப்பால் முஸ்லிம்கள் மனது தளர்ந்துவிடவில்லை. இது எங்கள் தேசம், நாங்கள் முதல்நிலைக் குடிமகன்கள்’’.

இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x