Published : 10 Nov 2019 08:33 AM
Last Updated : 10 Nov 2019 08:33 AM

அயோத்தி வழக்கில் மேல்முறையீடு செய்வதில் முஸ்லிம் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து முஸ்லிம் தலைவர்கள் சிலர் திருப்தியும் சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு செய்வதிலும் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முஸ்லிம் தரப்பினர் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:

ஜபர்யாப் ஜிலானி, செய்தித் தொடர்பாளர், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. இது அதிருப்தி அளிப்பதாக உள்ளது. மசூதி இருந்த இடமும் அதன் வெளிப்புற நிலமும் எதிர் தரப்புக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பதே காரணம். இதை எங்களுக்கு அளித்த நீதியாகக் கருத முடியாது. எனவே, தீர்ப்பின் முழு விவரங்களையும் படித்த பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுப் போம்.

எனினும், இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த பல்வேறு கருத்துகள் சமூகத்துக்கு பலன் அளிப்பதாக உள்ளன. இது, நாட்டின் மதச்சார்பின்மையை தொடர வழிவகுக்கும். குறிப்பாக, 1991-ம் ஆண்டின் இந்திய தெய்வீக நம்பிக்கை மீதான சட்டம் வலுவிழக்கச் செய்யக் கூடாது என எங்கள் தரப்பு வழக்கறிஞர் தவான் கூறியதை நீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது. அதேபோல, ஒரு மதத்தின் தெய்வ நம்பிக்கை மற்றொரு மதத்தின் தெய்வ நம்பிக்கையைவிடப் பெரியது அல்ல. நம் நாட்டில் அனைத்து மதங்களும் சமமானவை என்ற நீதிமன்றத்தின் கருத்தும் வரவேற்கக் கூடியது.

இந்த தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் விமர்சனத்துக்கு உரியவை. உதாரணமாக, 1528-ல் மீர்பாகி கட்டிய பாபர் மசூதி இங்கிருந்தது என ஏற்கப் பட்டுள்ளது. ஆனால், 1857-ம் ஆண்டுக்கு பின் அந்த மசூதியில் தொழுகை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளனவே தவிர, அதற்கு முன்பு தொழுகை நடைபெற்றதற்கு ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய பயணியின் குறிப்புகளில் இடம்பெற்றுள்ள இந்துக்களுக்கு சாதகமான கருத்துகளை ஏற்கும் நீதிமன்றம், முஸ்லிம்களுக்கு சாதகமான கருத்துகளை ஏற்கவில்லை.

இதுபோன்ற, சர்ச்சைகளை மேல்முறையீட்டின்போது முன் வைப்போம். இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்வோம். அதில், இந்த வழக்கு விசாரணையின்போது வாதாடிய வழக்கறிஞர்களின் கருத்துகளும் பெறப்படும். இருப்பினும், மேலோட் டமாக படித்ததிலேயே மேல்முறை யீட்டுக்கான முகாந்திரம் உள்ளது.

ஜுபர் பரூக்கீ, தலைவர், உபி சன்னி மத்திய வக்ஃபு வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இதன் மீது மேல்முறையீடு செய்யும் எண்ணம் இல்லை. எங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்போவதாக யாராவது கூறினால் அதை நம்ப வேண்டாம். 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் மசூதியை ஏற்பது குறித்து எங்கள் நிர்வாகக் கூட்டத்துக்கு பின் முடிவு செய்யப்படும்.

கமால் பரூக்கீ, நிர்வாகக்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்: பாபர் மசூதிக்கு பதிலாக 100 ஏக்கர் நிலம் அளித்தாலும் எங்களுக்கு பயன் இல்லை. அயோத்தியில் 67 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டு வெறும் 5 ஏக்கர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது என்ன நியாயம் எனத் தெரியவில்லை. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் பலன் கிடைக்காத நிலையே அதிகமாக உள்ளது. இதனிடையே, கோயில் கட்டுவதற்கும் தடை பெற முடியாது.

இக்பால் அன்சாரி, முக்கிய மனுதாரர்: நாம் முன்கூட்டியே கூறியபடி உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். உச்ச நீதிமன்றம் மிகப்பெரிய ஒரு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தீர்ப்பின்படி மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் எந்த இடத்தில் அரசு ஒதுக்குகிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x