

புதுடெல்லி
அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியிடப்பட்டதன் எதிரொலியாக நாடு முழுவதும் போலீஸாரும், ராணுவ வீரர்களும் தொடர்ச்சியான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு அமைதி காத்துள்ளனர்.
அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியானது. தீர்ப்பு வெளியாவதையொட்டி உத்தரபிரதேசம் மட்டுமல்லாது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, போபால், பாட்னா, லக்னோ, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்தப் பாதுகாப்புப் பணியில் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தனர். இதனால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வீட்டில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் அஜித் பல்லா, புலனாய்வுத்துறை இயக்குநர் அர்விந்த் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியபிரதேச முதலவர் கமல்நாத் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும் அனைத்து மாநில போலீஸ் டிஜிபிக்களுடனும் மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கடி தொலைபேசியில் பேசி நிலவரங்களைக் கேட்டறிந்தார். பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளைும் எடுக்குமாறு டிஜிபிகளுக்கு அவர் உத்தரவைப் பிறப்பித்தார். - பிடிஐ