

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
அயோத்தி வழக்கு முஸ்லிம் தரப்பினருக்கு சாதகமாக அமையாததற்கு, பாபர் மசூதி இருந்த நிலம் ‘நஜுல் நிலம்’ பட்டியலில் இருந்ததே காரண மாகியுள்ளது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அகில இந்திய தனிச்சட்ட முஸ்லிம் வாரியம், தனது நிர்வாகக்குழு ஆலோசனைக்கு பிறகு மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதில் அவர் களுக்கு சீராய்வு மனு அளிக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஏனெனில் வழக்கை விசாரித்த அமர்வின் 5 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பு வழங்கி யுள்ளனர். எவரும் மாறுபட வில்லை. எனவே உச்ச நீதிமன்ற நீதிபதி அறையில் நடக்கும் சீராய்வு மனு விசாரணையில் தங்களுக்கு சாதகமாக மிக வலுவான கருத்தை முஸ்லிம் வாரியம் எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.
ஒருவேளை அது ஏற்கப்பட்டாலும், கோயில் கட்ட அளித்த அனுமதிக்கு தடை கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே அயோத்தியில் இனி கோயில் கட்டுவதை தடுப்பதற்கான வழிகள் முழுவதும் அடைக்கப்பட்டு விட்ட நிலையே தெரிகிறது.
அயோத்தி வழக்கு முஸ்லிம் தரப்பினருக்கு சாதகமாக அமையாததற்கு, பாபர் மசூதி இருந்தது கைவிடப்பட்ட அல்லது புறம்போக்கு நிலம் எனப்படும் ‘நஜுல் நிலம்’ பட்டியலில் இருந்ததே காரணமாகியுள்ளது. உருது வார்த்தையான நஜுல் எனும் பெயரிலான நிலம் உ.பி. அரசுக்கு சொந்தமானது ஆகும். நஜுல் நிலம் என ஒரு புதிய பட்டியல் ஆங்கிலேயர் காலத்தில் உருவானது.
நஜுல் நிலம் வரலாறு
ஆங்கிலேயருக்கு நாடு அடிமைபட்டிருந்தபோது 1857-ல் மீரட்டில் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. இதில் கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா ஜாபர் தலைமையில் ஜான்சி ராணி உள்ளிட்ட வடபகுதியை ஆண்ட சிறிய மன்னர்களும் போரிட்டனர். இதில் ஏற்பட்ட தோல்வியால் அனைவரும் தங்கள் இடங்களை விட்டு தலைமறைவாகினர். அப்போது அவர்களால் கைவிடப்பட்ட நிலங்களை ‘நஜுல்’ என அறிவித்த ஆங்கிலேய அரசு அவற்றை நிர்வகிக்க தனி அரசுத் துறையை அமைத்தது.
இத்துறை சார்பில் நஜுல் நிலங்கள் தனியாருக்கும் மலிவான தொகையில் 99 வருடங்கள் வரை குத்தகைக்கும் விடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 99 வருடங்களுக்கு விடப்படும் குத்தகையை அரசு புதுப்பித்து மீண்டும் நிலம் ஒதுக்குவது உண்டு. இதுபோன்ற சிக்கலில் இன்றும் உ.பி.யில் பல நஜுல் நிலங்கள் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. நஜுல் துறை அதே பெயரில் இன்றும் உ.பி.யில் இயங்குகிறது. இதன் அலுவலகம் லக்னோ, ஆக்ரா, அலகாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களை விற்க முடியாது. குத்தகை எடுத்தவர் இறந்த பிறகு அவரது வாரிசுகள் அதில் தொடர முடியும்.
இந்த வகையில் நஜுல் பட்டியலில் சேர்க்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தை அதன் நிர்வாகிகள் அரசிடம் விண்ணப்பித்து குத்தகையை புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. 1954-ல் அமைந்த வஃக்பு வாரிய சட்டப்படி தொடங்கப்பட்ட சன்னி மத்திய வஃக்பு வாரியப் பட்டியலில் பாபர் மசூதி சேர்க்கப்பட்டது. வஃக்பு சொத்தாகக் கருதப்படும் மசூதியின் நஜுல் குத்தகையை புதுப்பிக்கத் தேவையில்லை என அதன் நிர்வாகிகள் விட்டு விட்டனர்.
இதனால் பாபர் மசூதி தங்களுக்கு சொந்தமானது என முஸ்லிம் தரப்பினர் அளித்த ஆதாரங்கள் ஏற்கப்படவில்லை. பாபர் மசூதியின் நஜுல் நிலத்தின் வரிசை எண் 583 என்றிருந்தது. பிறகு அது உ.பி. சன்னி மத்திய வஃக்பு வாரியத்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தப் பிரச்சினையின் அடிப்படையில் தான் உ.பி. சன்னி மத்திய வஃக்பு வாரியம் அயோத்தி வழக்கில் 1961-ல் மனு அளித்து வாதியாக இணைந்தது.