

மும்பை
மகாராஷ்டிர மாநில முதல்வராக பதவியேற்க வருமாறு தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் கோஷியாரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்தொற்றுமை இல்லாததால் இழுபறி நீடிக்கிறது.
தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை சிவசேனா கோரி வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு அதிகாரத்தில் சமபங்கு அளிக்க இயலாது என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
தற்போதைய சட்டப்பேரவையின் காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் முதல்வர் பதவி என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் உறுதியுடன் உள்ளதால் பிரச்சினை தீரவில்லை.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் நேற்றுடன் பதவிக் காலம் முடிந்ததால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.
இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸை மீண்டும் முதல்வராகப் பதவியேற்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் கோஷியாரி கூறியுள்ளார்.