‘‘இந்தத் தருணம் முழுமையடைந்தது’’ - அயோத்தி வழக்கு குறித்து அத்வானி கருத்து

‘‘இந்தத் தருணம் முழுமையடைந்தது’’ - அயோத்தி வழக்கு குறித்து அத்வானி கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி

இந்தத் தருணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வந்தன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அயோத்தி ராமஜென்மபூமி இயக்கத்தை பெரிய அளவில் நடத்திய பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளதாவது:

‘‘இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களைப் போலவே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் அமைக்கப்பட வழி ஏற்பட்டுள்ளது. இந்தத் தருணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்.

சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய அந்த மக்கள் இயக்கத்தில் எனது பங்களிப்பையும் செலுத்த வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மசூதியா அல்லது கோயிலா என்ற நீண்டகாலப் பிரச்சினைக்கு விடை கிடைத்துள்ளது.

அயோத்தி விவகாரத்தில் எனது நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்’’.

இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in