

புதுடெல்லி
அயோத்தி நில விவகார வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று கண்டித்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு என்பது திட்டமிட்டுச் செய்யப்பட்ட நடவடிக்கை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்குத் தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்குத் தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த போதிலும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சட்டவிரோதம் என்று கண்டித்துள்ளது.
மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக இருந்த இடத்தை இடித்துத் தள்ளியது திட்டமிட்ட ஒரு செயல். 450 ஆண்டுகளுக்கு முன் மிகச்சரியாகக் கட்டப்பட்ட மசூதியை முஸ்லிம்கள் தவறாக இழந்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது. லிபரான் கமிஷனையும் கோடிட்டுக் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.
1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அடுத்த 10 நாட்களில் அதை விசாரிக்க அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அரசு நீதிபதி லிபரான் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தது. நீதிபதி எம்எஸ் லிபரான் அப்போது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
நீதிபதி லிபரான் முழுநேரமும் பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்தினார். இவர் தலைமையிலான கமிஷனுக்கு 48 முறை நீட்டிப்பு வழங்கப்பட்டது. தான் ஓய்வு பெற்ற பின்னும் விசாரணையைத் தொடர்ந்த நீதிபதி லிபரான் 17ஆண்டுகளுக்குப் பின் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதாவது கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன், 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், வி.பி.சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உ.பி.யில் அப்போது முதல்வராக இருந்த கல்யாண் சிங் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு இருந்தது.
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பாஜக, சங்பரிவார் அமைப்புகளான ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங் தளம் ஆகியவற்றில் உள்ள மூத்த தலைவர்கள் குற்றவாளிகள் என்று சுட்டிக்காட்டியது. பாபர் மசூதிக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்த உ.பி. முதல்வர் கல்யாண் சிங் கரசேவகர்கள் மசூதியை இடிக்க அனுமதித்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
பிடிஐ