

அயோத்தி
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் மூல வழக்கைத் தொடர்ந்த இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு பெரியவர்கள் இருவருமே தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே காலமாகியுள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வந்தன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் முதன்முறையாக இந்து மற்றும் முஸ்லிம் தரப்பில் வழக்குத் தொடுத்த இருவருமே தற்போது காலமாகி விட்டனர். வழக்கில் கிடைத்த தீர்ப்பைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
நிர்மோகி அகாரா அமைப்பின் தலைவராக இருந்த பாஸ்கர் தாஸ், கடந்த 1959-ம் ஆண்டு பாபர் மசூதிக்கு எதிராக பைசாபாத் நீதிமன்றத்தில் முதலில் வழக்குத் தொடுத்தார். இதுபோல முஸ்லிம் தரப்பில் ஹசிம் அன்சாரி முதலில் வழக்குத் தொடுத்தார்.
முதன்மை மனுதாரரான மஹந்த் பாஸ்கர் தாஸ் 89-வது வயதில் கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.பக்கவாதம் நோய் ஏற்பட்ட அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், பாஸ்கர் தாஸ் அயோத்தியை விட்டு வேறு ஊருக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபோலவே முஸ்லிம் தரப்பு முதன்மை மனுதாரரான ஹசிம் அன்சாரி தனது 96-வது வயதில் 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். அயோத்தி பிரச்சினையில் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் சுமுகமான உறவு இருந்து வந்தது.