Published : 09 Nov 2019 04:22 PM
Last Updated : 09 Nov 2019 04:22 PM

அயோத்தி தீர்ப்பு: அறிந்துகொள்ள வேண்டிய 10 அம்சங்கள்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

நூற்றாண்டு காலம் நடந்து வந்த அயோத்தி வழக்கில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பளித்தது.

அதேசமயம், அயோத்தியில் முஸ்லிம் சமூகத்தினர் கேட்கும், சரியான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியோர் உரிமை கொண்டாடினார்கள். இதை சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளக் கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல் முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள்:

  1. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி. கோயில் கட்டுவதற்கு 3 மாதத்துக்குள் அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்கி அதன் வசம் 2.77 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப் பட வேண்டும். அந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகளை அந்த அறக்கட்டளை கண்காணிக்க வேண்டும். அதற்குரிய உறுப்பினர்களை 3 மாதங்களில் நியமிக்க வேண்டும்
  2. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள். ஆனால், இடம் முழுமையாக தங்களுக்குச் சொந்தம் என்பதையும் முஸ்லிம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை.
  3. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா விரஜ்மான், சன்னி வக்பு வாரியம் ஆகியவை சமமாகப் பிரிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது.
  4. அயோத்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வாசித்தது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி தவிர்த்து வருங்கால தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் இருந்தார்கள்.
  5. 40 நாட்கள் தொடர்ந்து விசாரணைக்குப் பின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மற்ற 4 நீதிபதிகளிடம் ஆலோசனை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே 2-வது நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்காகும்.
  6. நிலத்துக்கு உரிமை கொண்டாடிய ஷியா வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
  7. அயோத்தியில் உள்ள பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. 2003-ம் ஆண்டு இந்திய தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி பாபர் மசூதிக்குக் கீழ் ஒரு கட்டிடம் இருக்கிறது. அந்தக் கட்டிடம் முஸ்லிம் சமூகத்தின் கட்டிடத்தைப் போல் அல்ல என்ற தொல்லியல் துறையின் அறிக்கையை எந்தவிதத்திலும் ஒதுக்கிவிட முடியாது அதேசமயம், பாபர் மசூதிக்குக் கீழே இருக்கும் கட்டிடம் கோயில் போன்ற தோற்றத்திலும் இல்லை என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது.
  8. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மறுக்க முடியாது. நம்பிக்கை என்பது தனிமனிதர் சார்ந்தது.
  9. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். ஒரு மதத்தினரின் நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையைத் தடுப்பதாக இருக்கக் கூடாது.
  10. 1857-ம் ஆண்டுக்கு முன்புவரை சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபடத் தடையில்லை. ஆங்கிலேயர் வருவதற்கு முன் அயோத்தியில் இந்துக்கள் ராமர், சீதாவை வணங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x