Published : 09 Nov 2019 02:48 PM
Last Updated : 09 Nov 2019 02:48 PM

‘‘தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை; உரிமை போராட்டம் தொடரும்’’ -  ஒவைசி

ஹைதராபாத்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி இதுபற்றி கூறியதாவது:

''அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் உச்சமானதாக இருக்கலாம். ஆனால் அது தவறிழைக்காது என கூற முடியாது. அரசியல் சட்டத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தானமாகத் தேவையில்லை. 5 ஏக்கர் நிலத்தை நிராகரிக்கிறோம். அதனை ஏற்கும் நிலையில் இருக்க விரும்பவில்லை.

அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் தனது போலி நிறத்தை விடுத்து உண்மையான நிறத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாபர் மசூதிக்குள் 1949-ம் ஆண்டு சிலை வைக்கப்படவில்லை. பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்து விடாவிட்டால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும். நரசிம்மராவ் தனது பணியைச் சரிவர செய்திருந்தால் பாபர் மசூதி இருந்திருக்கும்''.

இவ்வாறு ஒவைசி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x