

புதுடெல்லி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடனும், பாரம்பரிய மரபுகளுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
மதச்சார்பற்ற தன்மை மற்றும் இணக்கத்தை மக்கள் பேண வேண்டும். அரசியல் சட்டத்தை மதித்து அனைவரும் நடக்க வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இதுபற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பை முழு மனதுடன் காங்கிரஸ் ஏற்கிறது. ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்றார்.